சிங்கப்பூர் தனது 60 ஆம் ஆண்டு சுதந்திரதினத்திற்கான கண்கவர் SG60 தேசியதின அணிவகுப்புடன் ஒத்திகையைக் கொண்டாடியது.
பாடாங்கில் நடைபெற்ற அந்த நிகழ்வில் நான் கலந்துகொண்டது மறக்கமுடியாத அனுபவம்.
நாட்டின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் கலாசார அஞ்சலிகள், இராணுவ அணிவகுப்புகள் மற்றும் துடிப்பான வண்ணமிகு நிகழ்வுகள் இடம்பெற்றன.
அந்த நிகழ்வுகளின் சிறப்பம்சங்களில் ஒன்று சிங்கப்பூர் விமானப்படையின் சாகசம். அது நாட்டின் மீள்தன்மை மற்றும் வலிமையைக் குறிக்கிறது.
மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு உலகளாவிய புகழுக்கு உயர்ந்ததற்கான ஒரு நிகிழ்ச்சியாக SG60 தேசியதின ஒத்திகை இருந்தது.
‘பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு சேர்வது நாடு (குறள்:733) என்ற குறளுக்கிணங்க பல்வேறு காரணங்களுக்காக இங்கு குடியேறி வாழ்ந்து வரும் மக்களுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் வேண்டியதைக் குறைவின்றிச் சிறப்பாக வழங்கும் நிலைக்கு உயர்ந்திருக்கும் எழுச்சிமிகு சிங்கப்பூரில் வாழ்வதிலும் இந்த ஒத்திகையில் கலந்துகொண்டதிலும் பெருமை கொள்கிறேன்.
அத்னான் (உயர்நிலை 3) கான் எங் செங் பள்ளி
எதிர்காலத் தலைமுறை தொடர்ந்து பெருமையாகவும் சிறப்பாகவும் வாழ...
இந்த ஆண்டு எனக்கு மிக உற்சாகமாக இருக்கிறது. காரணம், நாம் நம் தேசத்தின் அறுபதாவது சுதந்திர நாளைக் கொண்டாட இருக்கிறோம்.
தொடர்புடைய செய்திகள்
இது ஆண்டிற்கு ஒரு முறை நம் ஒற்றுமையையும் வளர்ச்சியையும் கொண்டாடும் நாள். ஆனாலும் அப்படி என்ன அதற்குச் சிறப்பு என்று கேட்டால், இதுதான் என் பதில்.
உலகத்திற்கே தெரியாத, எந்த வளங்களும் இல்லாத சிறிய தீவு இது. முன்னேறுவதற்கு ஓர் உறுதிமொழி நமக்குக் கற்றுகொடுக்கபட்டது. இனம், மொழி மதம் ஆகிய வேற்றுமைகளைக் கடந்து சமத்துவமாக உழைத்தால், நமக்கு மகிழ்ச்சி, செழிப்பு, முன்னேற்றம் கிட்டும்.
இந்த உறுதிமொழியை அனைவரும் பின்பற்றி வருவதால்தான் நாம் வாழும் இச்சிறிய தீவின் சிறப்பை உலகமே வியப்புடனும் மரியாதையுடனும் பார்க்கிறது.
நம் முன்னோர் பின்பற்றிய இதை நாமும் தொடர் ஓட்டம்போல் பின்பற்றினால் எதிர்காலத் தலைமுறையும் தொடர்ந்து பெருமையாகவும் சிறப்பாகவும் வாழலாம் என்பது உறுதி.
இசபெல் (உயர்நிலை 1) கான் எங் செங் பள்ளி
சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பேன்!
இவ்வாண்டு, சிங்கப்பூர் தனது 60வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகிறது. 1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்நாடு, இன்று உலகின் முன்னேறிய, அமைதியான, பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
பல இனம், மொழி, கலாசாரத்தைக் கடந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழும் ஒரே இடம் சிங்கப்பூர்.
கல்வி, தொழில்நுட்பம், பசுமை நகரத் திட்டங்கள், சுகாதாரம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் உலக அளவில் பாராட்டப்படுகிறது.
நமது முன்னோர்களின் அர்ப்பணிப்பு, குடிமக்களின் ஒத்துழைப்பு, நல்லாட்சி ஆகியவையே இவ்வெற்றிக்கான காரணங்கள்.
இந்நாளில் நாம் நாட்டின் வரலாற்றை நினைவுகூர்ந்து, எதிர்கால வளர்ச்சிக்கு உறுதி ஏற்க வேண்டும்.
சிங்கப்பூரின் குடிமக்களில் நானும் ஒருவர் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். மேலும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
சிங்கப்பூருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.