மார்ச் மாத பள்ளி விடுமுறையில் குடும்பத்துடன் பொழுதைக் கழிக்க ஒரு சிறந்த நடவடிக்கையைத் தேடுகிறீர்களா?
சிங்கப்பூர் கடல்வாழ் உயிரினக் காட்சியகம் (Singapore Oceanarium), சிறுவர்களுக்காகவும் குடும்பங்களுக்காகவும் முதன்முறையாக ‘ஓஷன் கிட்ஸ் ஃபெஸ்டிவல்’ (Ocean Kids Festival) என்ற சிறப்பு விழாவை அறிமுகப்படுத்துகிறது.
வரும் மார்ச் 13 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறவுள்ள இந்த விழா, கடல்சார் கல்வி, நேரடி செய்முறைப் பயிற்சிகள், குடும்பப் பொழுதுபோக்கு ஆகியவற்றின் சுவாரசியமான கலவையாக அமைந்துள்ளது.
சிறுவர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள்
ஏழு முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்காக 45 நிமிட ‘சிறிய கடல் நிபுணர்’ (Little Ocean Expert) நிகழ்ச்சி $15 கட்டணத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், குழந்தைகள் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், கடல்சார் ஆராய்ச்சியாளர்களைச் சந்தித்து அவர்களின் பணிகளைப் பற்றி நேரடியாக அறிந்துகொள்ளலாம்.
குழந்தைகளுக்குப் பிரத்யேகச் சீருடைகள் அணியும் வாய்ப்பும், இலவச ஆக்சோலாட்ல் (axolotl) பொம்மையும் வழங்கப்படும். ஒரு குழந்தையுடன் ஒரு பெரியவர் இலவசமாகப் பங்கேற்கலாம். குறைந்த இடங்களே உள்ளதால் முன்பதிவு அவசியம்.
கலை, இசை இலவசக் கற்றல் நிகழ்ச்சிகள்
காட்சியகத்தின் ஆராய்ச்சி மையத்தில் பொதுமக்களுக்கு இலவசக் கதை சொல்லும் நிகழ்ச்சிகளும் களிமண் பவளப்பாறைகள் செய்யும் பயிற்சியும் நடைபெறும்.
அத்துடன், தேசிய நூலக வாரியத்தின் நடமாடும் நூலகமான ‘மோலி’ (Molly), மார்ச் 16 முதல் 19 வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கு இடம்பெறும்.
தொடர்புடைய செய்திகள்
மார்ச் 14 முதல் 22 வரை பென்டெல் (Pentel) ஆதரவில் பேட்ஜ் (badge) தயாரிக்கும் பயிற்சியும், மார்ச் 14, 21, 28 ஆகிய தேதிகளில் மாலை வேளைகளில் சிங்கப்பூர் இளையர் பில்ஹார்மோனிக் இசைக்குழுவின் (Singapore Youth Philharmonic Orchestra) செவ்வியல் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
கூடுதல் கட்டணத்தில் சிறப்புப் பயிலரங்குகள்
கடல்சார் வரலாற்றை அறிய, தினசரி மதியம் 2 மணிக்கு $88 கட்டணத்தில் இரண்டு மணி நேர ‘ஃபாசிலிஸ்ட் பயிலரங்கு’ (Fossilist Workshop) நடைபெறும். இதில் தொல்பொருள்களைக் கண்டறியும் பயிற்சி வழங்கப்படும்.
மேலும், கடல் குதிரைகள், ஜெல்லி மீன்கள் குறித்து அறிய $28 கட்டணத்தில் 45 நிமிட ‘அனிமல் ஸ்பாட்லைட்’ (Animal Spotlight) நிகழ்ச்சிகள் வார நாள்களில் நடைபெறும்.
இந்தக் கட்டணங்களில் காட்சியகத்தின் அடிப்படை நுழைவுச்சீட்டு அடங்காது.
உணவும் மற்ற சிறப்பு பொருள்களும்
விழாவில் சிறுவர்களுக்கான விலங்கு வடிவ உணவுகளும், ஆக்சோலாட்ல் வடிவத்தில் பொருள்களும் விற்பனைக்குக் கிடைக்கும்.
கடல் வளப் பாதுகாப்பின் அவசியத்தையும் ஆர்வத்தையும் வருங்காலத் தலைமுறைகளுக்கு உணர்த்தும் இந்த விழாவில் நீங்களும் குடும்பத்துடன் பங்கேற்கலாம்.
நுழைவுச்சீட்டுகள் மற்றும் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான முன்பதிவுக்கு www.singaporeoceanarium.com/ocean-kids-festival என்ற இணையத்தளத்தை நாடலாம்.

