தமிழ் மொழி, புது இணையக் கற்றல் வழி

2 mins read
e3eb280e-6d07-40df-bb9f-77a7278886f3
‘சிறுவர் கதை நேரம்’ இணையத்தளம் சென்ற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) தேசிய நூலகக் கட்டடத்தில் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது.  - படம்: சிறுவர் கதை நேரம்
multi-img1 of 2

சிங்கப்பூரைச் சார்ந்த பிரபல இடங்கள், உணவு வகைகள் மற்றும் தொழில்களை மையமாகக் கொண்டு ‘சிறுவர் கதை நேரம்’ என்ற இணையத்தளம் சென்ற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) தேசிய நூலகக் கட்டடத்தில் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. 

பாலர் பள்ளி மாணவர்களுக்குக் கூடுதலாகத் தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தி, அன்றாட சிங்கப்பூர் சூழலில் சொற்களை அடையாளம் கண்டு பயன்படுத்த இந்தப் புதிய கற்றல் இணையத்தளம் உதவும் என்றார் நிறுவனர் ஆய்ஷா இக்பால், 42. 

“சிறுவர் கதை நேரம், இரண்டாண்டு உழைப்பின் பலன். மாணவர்களிடம் எளிய முறையில் தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். தமிழ் கற்கும் அனுபவம் அவர்களுக்கு சுவாரசியமாகவும் இருக்க வேண்டும்,” என்றார் அவர்.

கடந்த 10 ஆண்டுகளாக ‘ஏபிசிஸ் ஆஃப் தமிழ்’ எனும் தமிழ் கற்றலுக்கான இணையத்தளத்தை நிர்வகித்து வருகிறார் ஆய்ஷா.

மொழி ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் மாணவர்களுக்கான கதைக் காணொளிகள், மின்னிலக்கப் பயிற்சித் தாள்கள், மின்னிலக்கப் பட அட்டைகள் இந்த இணையத்தளத்தில் இலவசமாக இடம்பெறுகின்றன. மேலும், பாலர் பள்ளி மாணவர்களுக்கான கதைப் புத்தகங்கள், பயிற்சி நூல்கள் போன்றவை விற்பனைக்கு உள்ளன. 

“காலம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் வேளையில், மாணவர்களின் கற்றல் அணுகுமுறையும் மாறிவருகிறது. அதற்கேற்ப நாமும் அவர்களுக்கு தக்க முறையில் உதவ வேண்டும்,” என்று வலியுறுத்தினார் ஆய்ஷா. 

இந்த இணையத்தளத்தில் முழுவதும் தொழில்நுட்ப ரீதியில் தமிழ் மொழி கற்றல் இடம்பெறுகிறது. அனிமேஷன் காணொளிகள், எளிமையான மின்னிலக்க விளையாட்டுகள், தமிழில் கலந்துரையாடலை ஊக்குவிக்கும் கதைகள் போன்ற அம்சங்கள் இதில் அடங்கும். 

“தமிழ் மொழி மீதான ஆர்வமும் ஈர்ப்பும் மாணவர்களிடையே இருந்தால், அதைப் பயன்படுத்தும் நம்பிக்கையும் வளரும். அதனால், இன்றைய நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாலர் பள்ளி மாணவர்களிடம் இந்த முயற்சியை தொடங்க முற்பட்டேன்,” என்றார் அவர்.

சிங்கப்பூர் கல்விச் சூழலில் தற்போது தொழில்நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் பெற்றோரும் கற்றலுக்காக அதைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று ஆய்ஷா அறிவுறுத்தினார். 

‘சிறுவர் கதை நேரம்’ இணையத்தளத்தின் அதிகாரத்துவ தொடக்க நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோர் வருகையளித்தனர். கலை, கைவினைப் பொருள்களை உருவாக்குதல், மருதாணி, புகைப்படம் எடுக்கும் வாய்ப்புகள் போன்ற நடவடிக்கைகள் நிகழ்ச்சியில் இடம்பெற்றன. 

‘சிறுவர் கதை நேரம்’ என்ற இணையத்தளத்தை www.siruvarkathaineram.com என்ற இணைய முகவரி வழி நாடலாம். 

“வருங்காலத்தில் இந்த இணையத்தளத்தில் மேலும் பல கதைகளையும் தமிழ் மொழி கற்றலுக்கான இன்னும் பல அங்கங்களையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இதன்வழி, தமிழ் மொழி கற்றல் மாணவர்களுக்கு எளிதாகவும், இலவசமாகவும் அமையும்,” என்றார் ஆய்ஷா.

குறிப்புச் சொற்கள்