ஓர் அழகான காடு. அங்கே ஒரு பெரிய ஆலமரத்திலிருந்த காகமும் பக்கத்து குளத்திலிருந்த கொக்கும் நெருங்கிய நண்பர்கள்.
ஒரு நாள், கொக்கு தன் நண்பனான காகத்திற்கு மதிய விருந்து கொடுக்க ஆசைப்பட்டது. “நண்பா! இன்று என் வீட்டில் உனக்கு விருந்து, தவறாமல் வந்துவிடு!” என்று அழைத்தது. காகமும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டது.
குளக்கரையில் இதமான காற்று வீச, கொக்கு பிடித்த சுவையான, கொழுத்த மீன்களை இருவரும் ருசித்துச் சாப்பிட்டனர். சாப்பிட்ட பிறகு, குளத்திலிருந்த தெளிவான நீரைக் குடித்துவிட்டு, காகம் மகிழ்ச்சியாகத் தன் இருப்பிடம் திரும்பியது.
சில நாள்கள் கழித்து, காகம் கொக்கை தன் வீட்டிற்கு அழைத்தது. “போன முறை நீ கொடுத்த விருந்து அமர்க்களம்! இன்று என் வீட்டில் உனக்கு விருந்து!” என்றது காகம்.
கொக்கு வந்ததும், காகம் தான் சேகரித்து வைத்திருந்த ருசியான பழங்கள், மிகவும் காரமான உணவுகளைப் பரிமாறியது. இருவரும் பேசிக்கொண்டே வயிறு முட்டச் சாப்பிட்டார்கள்.
வடை மிகவும் காரமாக இருந்ததால், இருவருக்கும் பயங்கரமான தாகம் எடுத்தது. “தண்ணீர் எங்கே?” என்று கொக்கு கேட்டது. ஆனால், மரத்தின் அருகில் குளமோ, குட்டையோ இல்லை.
காகம் உடனே பறந்து சென்று சுற்றிலும் தேடியது. ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில், ஒரு மண் பானையில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதைப் பார்த்தது. உடனே கொக்கை அழைத்தது.
“நண்பா! இங்கே வா! இதோ இந்தப் பானையில் தண்ணீர் இருக்கிறது!” என்றது.
தொடர்புடைய செய்திகள்
கொக்கு தன் நீண்ட கழுத்தையும், கூர்மையான அலகையும் உள்ளே விட்டு, சுலபமாக நீரை உறிஞ்சிக் குடித்தது. தாகம் தணிந்தது.
கொக்கு குடித்து முடித்ததும், காகம் ஆவலுடன் பானையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகை உள்ளே நுழைத்தது. ஐயோ! தண்ணீர் மிகவும் அடியில் இருந்தது. காகத்தின் சிறிய அலகால் தண்ணீரை எட்ட முடியவில்லை.
காகம், “பரவாயில்லை நண்பா! எனக்குத்தான் எட்டவில்லை. உனக்காவது தாகம் தீர்ந்தது. அதுவே எனக்கு மகிழ்ச்சி,” என்று பெருந்தன்மையாகக் கூறியது.
தன் நண்பன் தண்ணீர் அருந்தாமல் இருப்பதைப் பார்த்து தவித்த கொக்கு, “கவலைப்படாதே நண்பா! இதோ வருகிறேன்,” என்று சொல்லிவிட்டு, சிட்டாகப் பறந்தது.
சிறிது நேரத்தில், இளநீர்க் கடையில், யாரோ குடித்துவிட்டுப் போட்ட ஒரு பிளாஸ்டிக் உறிஞ்சுகுழலை (Straw) அலகில் கவ்விக்கொண்டு வந்தது.
காகத்திடம் அந்த உறிஞ்சுகுழலை நீட்டிய கொக்கு, “இதை வைத்துத் தண்ணீரைக் குடி நண்பா!” என்றது.
காகம் ஆச்சரியத்துடன், “இது என்ன புதுமையாக இருக்கிறதே?” என்று கேட்டது.
அதற்குச் சிரித்துக்கொண்டே கொக்கு சொன்னது, “உன் முன்னோர்கள் பானையில் தண்ணீர் மேலே வரும்வரை கூழாங்கற்களைப் போட்டு, தண்ணீர் குடித்தனர். அந்த வேலை எல்லாம் இந்தக் காலத்திற்கு ஒத்து வராது. காலம் மாறிவிட்டது, அதற்கேற்ப நம்மையும் நாம் ‘அப்டேட்’ (புதுப்பிக்க) செய்துகொள்ள வேண்டும்!” என்றது கொக்கு.
காகம் அந்த உறிஞ்சுகுழலைப் பானைக்குள் போட்டு, உறிஞ்சித் தாகம் தீர்த்தது. இரண்டு நண்பர்களும், “ஸ்மார்ட் (புத்திசாலித்தனமான) யோசனை!” என்று சிரித்துக்கொண்டே பறந்து சென்றனர்.
நீதி: மாற்றம் ஒன்றே மாறாதது: காலத்திற்கு ஏற்ப நமது பழக்கவழக்கங்களையும், செயல்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும். (Hard workஐ விட Smart work சிறந்தது).

