தொடங்கிவிட்டது சொற்களம் 2026

தொடங்கிவிட்டது சொற்களம் 2026

3 mins read
664012e6-b2ea-4732-b867-0bdd6d10a183
சொற்களம் 2026 விவாதப் போட்டியின் முதல் சுற்றில் தலைப்பை ஒட்டிப் பேசிய பிராட்ரிக் உயர்நிலைப் பள்ளி. - படம்: கீர்த்திகா ரவீந்திரன்
Google News Preferred Icon

உயர்நிலைப் பள்ளித் தமிழ் மாணவர்களுக்கான சொற்களம் 2026 விவாதப் போட்டியின் முதல் சுற்று சனிக்கிழமை (பிப்ரவரி 14) நடைபெற்றது.

மத்திய வட்டார இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள், மக்கள் கழக நற்பணிப் பேரவை இணைந்து ஏற்பாடு செய்த சொற்களம் 2026, 15வது ஆண்டாக நடைபெறுகிறது.

பெண்டிமியர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முதல் சுற்றில் மொத்தம் 30 பள்ளிகளைச் சேர்ந்த ​180 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

முதல் சுற்றுக்குமுன் ஜனவரி 24ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் பள்ளிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டன.

முதல் சுற்று இரண்டு அங்கங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வோர் அங்கமும் ஏறத்தாழ 45 நிமிடங்கள் வரை நீடித்தது.

முதல் அங்கத்தில் ‘மாணவர்களிடத்தில் தலைமைத்துவப் பண்புகள் வளர்வதற்கு பள்ளிகளில் போதிய வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை’ என்ற தலைப்பில் 14 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வெட்டியும் ஒட்டியும் பேசினர்.

இரண்டாவது அங்கத்தில் ‘இளையர்களிடையே உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது சமூக ஊடகங்களே’ என்ற தலைப்பில் வேறு 14 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் வெட்டியும் ஒட்டியும் பேசினர்.

முந்தைய ஆண்டுகளில் பங்கேற்ற சொற்களம் பேச்சாளர்கள் இம்முறை விவாதங்களுக்கு நடுவர்களாக வந்திருந்தது ஒரு சிறப்பு என்று தெரிவித்தார் சொற்களம் 2026 ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மீனாட்சி மதியழகன், 38.

“அதுமட்டுமன்றி ஏற்பாட்டுக் குழுவில் அதிக இளையர்களும் இவ்வாண்டு ஈடுபட்டுள்ளனர்,” என்றார் திருவாட்டி மீனா.

இது பள்ளி மாணவர்களுக்கும் உந்துதலாக விளங்கும் என்றார் அவர்.

செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி மாணவி ஷாகுல் ஹமீது ஃபதிலா பால்கிஸ், 15.
செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி மாணவி ஷாகுல் ஹமீது ஃபதிலா பால்கிஸ், 15. - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

முதல் முறையாக செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளியைப் பிரதிநிதித்து முதல் அங்கத்தில் பங்கெடுத்தார் மாணவி ஷாகுல் ஹமீது ஃபதிலா பால்கிஸ், 15.

“விவாதப் போட்டிகளுக்குப் பயிற்சி செய்ய அனைவரும் குறிப்பிட்ட நாள்களில் பள்ளியில் கூடுதல் நேரம் தங்க வேண்டியிருந்தது,” என்று நினைவுகூர்ந்தார் ஃபதிலா.

தான் போட்டியில் விவாதத்தை முன்வைத்தபோது எடுத்த முயற்சிகள் பலனளித்தன என்று கருதியதாகவும் அவர் சொன்னார்.

உட்லண்ட்ஸ் உயர்நிலைப்பள்ளி மாணவி ஹன்ஷித்தா திருமால்பதி, 13.
உட்லண்ட்ஸ் உயர்நிலைப்பள்ளி மாணவி ஹன்ஷித்தா திருமால்பதி, 13. - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

முன்வைக்கவுள்ள கருத்துகளை மனனம் செய்வது சவாலாக இருந்தது என்றார் உட்லண்ட்ஸ் உயர்நிலைப்பள்ளி மாணவி ஹன்ஷித்தா திருமால்பதி, 13.

“எல்லாக் கருத்துகளையும் மனனம் செய்யாமல் சில முக்கியச் சொற்களை மட்டும் மனனம் செய்து விவாதத்தை முடிந்தவரை முன்வைத்தேன்,” என்று தான் பயன்படுத்திய நுட்பத்தையும் தனது விவாத அனுபவத்தையும் அவர் குறிப்பிட்டார்.

விக்டோரியா உயர்நிலைப் பள்ளி மாணவர் குமார் சுந்தர், 15.
விக்டோரியா உயர்நிலைப் பள்ளி மாணவர் குமார் சுந்தர், 15. - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

பேச்சுப் போட்டிகளில் அதிக அனுபவம் கொண்ட விக்டோரியா உயர்நிலைப் பள்ளி மாணவர் குமார் சுந்தர், 15, சொற்களம் விவாதப் போட்டியில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை.

“விவாதங்களில் நமது கருத்துகளை மட்டும் பேசுவதோடு எதிர் அணிக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்ற கூடுதல் சிந்தனை தேவைப்படுகிறது,” என்றார் அவர்.

ஒப்புநோக்க பேச்சுப் போட்டி இதிலிருந்து பெரிதும் மாறுபடுகிறது என்றார் அவர்.

ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சொற்களம் விவாதப் போட்டிகளில் சென்றமுறை வாகை சூடிய செயின்ட் ஜோசஃப் கல்வி நிலையம் மீண்டும் இம்முறை களமிறங்குகிறது.

செயின்ட் ஜோசஃப் கல்வி நிலைய மாணவர் ராஜ் பாபு ரஷாத் தரனேஷ், 16.
செயின்ட் ஜோசஃப் கல்வி நிலைய மாணவர் ராஜ் பாபு ரஷாத் தரனேஷ், 16. - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

“கடந்த ஆண்டு கிட்டிய வெற்றி எங்களுக்கு நிச்சயமாக உற்சாகமளிக்கிறது. இருப்பினும் கவனமாக உள்ளோம். முதல் சுற்றைக் கடந்தால் ஒரு சிறந்த வாதத்தை முன்வைக்க எங்கள் முயற்சிகள் தொடரும்,” என்றார் அப்பள்ளி மாணவர் ராஜ் பாபு ரஷாத் தரனேஷ், 16.

இரண்டாம் சுற்று, காலிறுதிச் சுற்று, அரையிறுதிச் சுற்றுப் போட்டிகள் முறையே பிப்ரவரி 28, மார்ச் 14, ஏப்ரல் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

சொற்களம் 2026ன் மாபெரும் இறுதிச்சுற்று ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்