‘ஓடி விளையாடு பாப்பா’ என பாரதியார் அன்று கூறினார் அல்லவா?
அதுபோல ஓடி விளையாடுவது சிறுவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்துக்கும் மிக முக்கியமானதும்கூட.
அவ்வகையில், ஸ்டாண்டர்ட் சார்டர்ட் சிங்கப்பூர் நெடுந்தொலைவோட்டம் 2024ன் ‘கிட்ஸ் டேஷ்’ எனும் சிறுவர் ஓட்டத்திற்கு இவ்வாண்டு 5,500க்கும் மேற்பட்ட பெற்றோரும் மாணவர்களும் பதிவுசெய்தனர். சென்ற ஆண்டைவிட இது 10 விழுக்காடு அதிகம்.
நவம்பர் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று நடந்த சிறுவர் ஓட்டத்தில் 7 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 900 மீட்டரும், 6 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் 600 மீட்டரும் ஓடினர். சிங்கப்பூரின் பிரதான இடங்களில் ஒன்றான ‘எஃப்1 பிட்’ கட்டடத்தில் ஓட்டம் நடைபெற்றது.
உடற்குறையுள்ளோருக்கான நெடுந்தொலைவு ஓட்டத்தில் CI1 ஆண்கள் பிரிவில் அதிவேகமாக ஓடி கின்னஸ் உலகச் சாதனை படைத்த டாக்டர் சேக் லியாவ், சிறுவர்களோடு இணைந்து இவ்வாண்டு ஓடினார்.
ஓடி முடித்தபின் சிறுவர்களுக்குப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன. ஒரு சிறப்பான ‘கிட்ஸ் டேஷ்’ பரிசும் வழங்கப்பட்டது.
பல சுவாரசியமான விளையாட்டுச் சாவடிகளிலும் சிறுவர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்.
சமூக உண்டியலின் ‘ஷேரிட்டி’ யானை உருவ பொம்மை வலம் வந்து, தொண்டுபுரியும் சிந்தனையை சிறுவர்களிடத்தில் வளர்த்தது.
தொடர்புடைய செய்திகள்
சிறுவர் ஓட்டத்தில் மூன்றாம் முறையாகப் பங்கேற்ற ரயான்ஷ் ஸ்ரீவஸ்தவா, 7, நன்கொடையளித்ததற்காக ஒரு சிறு ‘ஷேரிட்டி’ யானை பொம்மையையும் பெற்றார். “ஓடுவதும் நன்கொடையளிப்பதும் எனக்குப் பிடித்திருந்தது,” என்றார் ரயான்ஷ். இவர் பள்ளியிலும் ஓடுபவர்.
14 மாதக் கைக்குழந்தை நிலவழகி, தன் பெற்றோர் கையைப் பிடித்தபடி 600 மீட்டர் கடந்தார். அவரைக் கண்டு பலரும் வியந்தனர்.
“எனக்கு ஓடப் பிடிக்கும். ஓடியதால் சற்று சோர்வடைந்தாலும் விளையாட்டுகள் எனக்குப் புத்துணர்ச்சியூட்டின. அடுத்த ஆண்டு நான் மீண்டும் வர விரும்புகிறேன்,” என்றார் கிரேஸ் வினோத், 6.
“பொம்மைத் துப்பாக்கி விளையாட்டு எனக்கு இருப்பதிலேயே பிடித்திருந்தது,” என்றார் நதிரா ஆதில், 6.
“இதுவே எங்கள் முதல் ஓட்டப்பந்தயம். நினைத்ததைவிட சற்று தூரமாக ஓடவேண்டியிருந்தது. எனினும், அதை வெற்றிகரமாக முடித்ததில் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றனர் சகோதரர்கள் அர்ஜுன்,8, ரோஹன் ஐயர், 5.
“‘பவுன்சிங் காசுல்’ போன்ற குதித்து விளையாடும் விளையாட்டுகள் எனக்குப் பிடித்திருந்தன. சிற்றுண்டி உணவும் சுவையாக இருந்தது,” என்றார் 600 மீட்டர் ஓடிய கெளரவ் சுரேஷ், 5.