தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுவர்களை அறிவியலால் கவர்ந்த ‘ஸ்டீம் லேப்’

2 mins read
9de792be-02c9-4647-976e-c8ab425200b7
தேசிய நூலக வாரியத்தின் ‘ஸ்டீம் லேப்’ விழாவில் சிறுவர்கள் உறிஞ்சுகுழல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். - படம்: ரவி சிங்காரம்

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை, கணிதம் ஆகியவற்றைக் கற்றல், ஆராய்ச்சியின் மூலம் சிறுவர்களை அறிவியல் உலகிற்கு அழைத்துச் சென்றது தேசிய நூலக வாரியத்தின் ‘ஸ்டீம் லேப்’ விழா.

ஆகஸ்ட் 15, 16 தேதிகளில் தேசிய நூலகக் கட்டடத்தின் வெளியேயும் மத்திய நூலகத்திலும் இவ்விழா நடைபெற்றது.

அறிந்திராதவற்றுள் அடியெடுத்து வைப்போம் (Enter the Unknown), உங்களுக்குப் பழக்கமான ஒன்றிலிருந்து விலகி, உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய புதிய நுண்ணறிவுகளைக் கண்டறிய உங்களை அழைக்கிறது என்பது இந்த ஆண்டின் கருப்பொருள்.

இந்த விழாவில் பல சாவடிகள் இருந்தன. செயல்முறைப் பட்டறைகள் முதல் நேரலை நிகழ்ச்சிகள் வரை, திருவிழா முழுவதும் பலவிதமான அனுபவங்களை மாணவர்கள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

STEAM ரகசியங்களைக் கண்டறிய, நூலகத்தைச் சுற்றி ஒரு புதையல் வேட்டையும் இடம்பெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆத்யா “அனைத்து நடவடிக்கைகளும் எனக்குப் பிடித்திருந்தன. உறிஞ்சுகுழல் (straw) வைத்து வீடு கட்டினோம்,” என்றார்.

போலரைசிங் ஃபில்டர் (Polarizing Filter), எப்படி அட்டையைத் திருப்பும் திசையைப் பொறுத்து வெவ்வேறு ஒளிக்கதிர்களை அனுமதிக்கின்றது எனக் கற்றுக்கொண்டார் அஹனா சாரு கார்த்திகேயன், 7. உறிஞ்சுகுழல் வைத்து அவர் ஒரு ‘ஃபெரிஸ் வீல்’லும் செய்தார்.

தேசிய நூலக வாரியம் ஏற்பாடு செய்திருந்த ‘ஸ்டீம் லேப்’ விழாவில் தேசிய பூங்கா கழகத்தின் கடல் பிரிவு, டாக்சிடர்மி (Taxidermy) மூலம் பாதுகாத்து வைத்திருந்த இரண்டு ஆமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. “அவற்றைக் காணும்போது உண்மையான ஆமைகளைக் காண்பது போலத் தத்ரூபமாக இருந்தது,” என்றார் நார்த்ஷோர் தொடக்கப்பள்ளி மாணவர் ஹிட்டான்‌ஷ்.

“சிங்கப்பூர் ஆர்ட்சைன்ஸ் அரும்பொருளகம் ஒளிக்கதிர்கள் பற்றிக் கற்பித்தது பள்ளியில் என் அறிவியல் பாடங்களுக்கும் கைகொடுக்கும். சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகத்தின் சாவடியில் விதவிதமான முத்திரைகளைப் பதிப்பது என்னைக் கவர்ந்தது. அங்கு மறுசுழற்சி செய்வது பற்றியும் கற்றேன்,” என்றார் ஹிட்டான்‌ஷ்.

லீ கோங் சியன் இயற்கை வரலாறு அரும்பொருளகத்தின் சாவடியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தொல்லுயிர் எச்சங்கள் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகக் கூறினார் டைமென்‌‌ஷன்ஸ் அனைத்துலகப் பள்ளியின் ரயலா சேட்டன், 13. “தொண்டூழியர்களும் அன்பாக இருந்தார்கள்,” என அவர் கூறினார்.

“மைக்ரோ:பிட் கோடிங் (micro:bit coding) நடவடிக்கை எனக்குப் பிடித்திருந்தது. சில விளையாட்டுகளையும் விளையாட முடிந்தது. நான் மெய்நிகர் உண்மை (virtual reality) சாவடியிலும் பங்கேற்றேன்,” என்றார் பாய லேபார் மெதடிஸ்ட் பெண்கள் (தொடக்கப்பள்ளி) மாணவி அக்‌ஷரா, 10.

அணு அறிவியலைப் பயன்படுத்தும் கணினி (quantum computing) மூலம் எப்படி முக்கியத் தகவல்களைப் பாதுகாக்கலாமெனக் கற்றுக்கொண்டது அக்‌‌ஷராவுக்கும் தனக்கும் சுவாரசியமாக இருந்ததாகக் கூறினார் அக்‌‌ஷராவின் தாயார்.

டைனோசர் பற்றிய வியத்தகு கண்காட்சி, பிடோக் பொது நூலகம், ஜூரோங் வட்டார நூலகம், தெம்பனிஸ் வட்டார நூலகம், பொங்கோல் வட்டார நூலகம், உட்லண்ட்ஸ் வட்டார நூலகம் ஆகிய இடங்களிலும் நடத்தப்படும்.

மேல்விவரங்களுக்கு https://www.nlb.gov.sg/main/site/discovereads/children/steam-lab-2025 இணையத்தளத்தை நாடலாம்!

குறிப்புச் சொற்கள்