‘நிறைகுடம் நீர் தளும்பாது’

‘நிறைகுடம் நீர் தளும்பாது’

2 mins read
e912b7ec-1cda-4394-8828-0dbc8cd5bb0d
தலைமையாசிரியர் மேடையில் ‘நிறைகுடம் நீர் தளும்பாது’ என்பதை மாணவர்களுக்கு விளக்குகிறார். - படம்: செயற்கை நுண்ணறிவு

முகிலன், அகிலன் இருவரும் தொடக்கநிலை ஐந்தில் பயில்கிறார்கள். முகிலன் நன்றாகப் படிப்பான்; ஆனால் “என்னைவிட அறிவாளி யாரும் இல்லை,” என்று எப்போதும் தற்பெருமை பேசுவான்.

அவனது வகுப்புத் தோழனான அகிலன் முற்றிலும் மாறுபட்டவன். அகிலன் வகுப்பிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறுபவன்; புத்தகங்களை நிறையப் படிப்பவன். ஆனால், அவன் எப்போதுமே அமைதியாக இருப்பான். யாரிடமும் தற்பெருமை பேச மாட்டான். மற்ற மாணவர்களுக்குப் பாடம் புரியவில்லை என்றால், பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பான்.

ஒருநாள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. “நான்தான் முதல் பரிசு வாங்குவேன்,” என்று முகிலன் எல்லோரிடமும் தம்பட்டம் அடித்தானே தவிர, சரியாகப் பயிற்சி செய்யவில்லை.

அகிலனோ அமைதியாக நூலகத்திற்குச் சென்று பல புத்தகங்களைப் படித்து, தன் அறிவியல் படைப்பை மிக நேர்த்தியாக உருவாக்கத் தொடங்கினான்.

போட்டி நாளும் வந்தது. மற்ற மாணவர்கள், பெற்றோர் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் அவரவர் செய்த அறிவியல் படைப்புகளைச் செய்து காண்பித்து விளக்கம் அளித்தனர்.

அகிலனும் தன்னுடைய கண்டுபிடிப்பைக் காட்டத் தொடங்கினான். ஆனால் அவன் செய்திருந்த படைப்பு மிகச் சாதாரணமாக இருந்தது; அத்துடன் அதைச் செய்து காண்பிக்கும்போது அது பாதியிலேயே பழுதாகிவிட்டது. முகிலனுக்கு அவமானமாகி விட்டது.

அடுத்து அகிலனின் முறை வந்தது. அகிலன் மிகவும் அமைதியாகவும் தெளிவாகவும் தான் உருவாக்கிய ‘சூரிய ஒளியில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரம்’ பற்றி நடுவர்களிடம் விளக்கினான். அவனுடைய சிறந்த படைப்பைக் கண்டு நடுவர்கள் வியந்து பாராட்டினார்கள்.

அப்போது தலைமையாசிரியர், “ஒரு குடத்தில் தண்ணீர் முழுமையாக நிரம்பியிருந்தால், அதைத் தூக்கிச் செல்லும்போது தண்ணீர் சத்தமின்றி அமைதியாக இருக்கும். ஆனால், குடத்தில் பாதி அளவு மட்டுமே தண்ணீர் இருந்தால், அது ‘சலசல’ என அதிக சத்தம் எழுப்புவதோடு வெளியே நீர் ததும்பி ஊற்றும்.

“அதைப் போலவே, அறிவும் திறமையும் உள்ளவர்கள் அகிலனைப் போல அடக்கமாகவும் அமைதியாகவும் இருப்பார்கள். அதையே ‘நிறைகுடம் நீர் தளும்பாது’ என்பார்கள்,” என்று விளக்கினார்.

தன்னைப் பற்றித் தலைமையாசிரியர் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும் தன்னுடைய தவற்றை உணர்ந்த முகிலன், அகிலனிடம் மன்னிப்பு கேட்டதோடு, அன்றிலிருந்து தற்பெருமை பேசுவதையும் நிறுத்திக் கொண்டான்.

கதையின் நீதி: அறிவுடையவர்கள் தற்பெருமை பேசாமல் அடக்கத்துடன் இருப்பார்கள். அடக்கமே சிறந்த அணிகலன்!

குறிப்புச் சொற்கள்