சிண்டாவின் உன்னத விருது வழங்கும் விழா இரண்டு முறை நடைபெற்றது. செப்டம்பர் 30ஆம் தேதியன்று நடந்த நிகழ்வில் விருது பெற்றவர்களில் மோனிஷ்கா கண்ணனும் ஒருவர்.
இவர் தொடக்கக்கல்லூரி இறுதித்தேர்வில் உச்ச தேர்ச்சி பெற்றதன் காரணமாக நிகழ்வில் பிற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார்.
“சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் நான் இந்த நிலையை எளிதில் அடையவில்லை. பாடங்களில் கவனம் செலுத்த எனக்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை.
“மற்ற மாணவர்களைவிட நான் கல்வியில் சற்று பின் தங்கி இருந்தேன். தேர்வு நேரங்களில் பெரும்பாலும் நம்பிக்கையின்றி இருந்தேன். அந்த நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்தேன்.
“நான் எவ்வளவு பயந்தாலும் நேரம் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதனால் என்மீது நானே நம்பிக்கை வைக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினேன். அன்று முதல் மனவுளைச்சலைத் தவிர்த்தேன்.
“தேவையில்லாமல் யோசிப்பதைவிட அந்த நேரத்தில் என்னால் என்ன செய்ய முடியும் என்பதில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.
“உயிரியல் எனக்கு மிகவும் பிடித்த பாடம் என்பதால் அதில் அதிக கவனம் செலுத்தினேன்.
“நான் முன்பு தன்னம்பிக்கை இல்லாமல் இருந்ததைப்போல் இருந்த மற்ற மாணவர்களிடம் உங்களுக்குப் பிடித்தமான இலக்கை அடைய அதை நோக்கி பயணிக்கவேண்டும். கல்வியில் சிறப்பாகச் செய்தால் மற்ற சாதனைகளை நம்மால் தன்னம்பிக்கையோடு செய்ய முடியும் என்ற நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினேன்,” என்று கூறினார் மோனிஷ்கா.
தொடர்புடைய செய்திகள்
இவர் உன்னத விருது பெற்றதோடு படிப்புக்கு அப்பாற்பட்டு, விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.
பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு முன்பு வலைப்பந்து, ஃபிரிஸ்பீ விளையாட்டுகளில் மிகவும் ஆர்வத்துடன் விளையாடினார். தற்பொழுது இவர் கூடைப்பந்து, டாட்ஜ்பால் போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
சவால்மிக்க சூழ்நிலைகளைக் கையாளும்போது குடும்ப உறுப்பினர்களிடம் சென்று அதைச் சொல்லி புலம்புவதைவிட அவர்களுடன் அர்த்தமுள்ள வழிகளில் நேரத்தைச செலவிட்டு மன உளைச்சலைத் தவிர்த்து வருகிறார். தான் இந்த உச்ச தேர்ச்சியைப் பெற தன்னுடைய குடும்பம் பேராதரவு கொடுத்தது என்பதை பெருமையோடு பகிர்ந்தார் மோனிஷ்கா.
வாழ்க்கையின் அடுத்த இலக்கு எவ்வித வருத்தமுமில்லாமல் மகிழ்ச்சியாக தன் வாழ்க்கையை எதிர்நோக்க வேண்டுமென்ற வித்தியாசமான வேட்கை வைத்துள்ளார் மோனிஷ்கா. இவரைப் போன்ற மாணவர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு மாணவர்கள் கல்வியில் சிறக்கவேண்டும்.

