கிறிஸ்துமஸ் நெருங்கிவிட்டது. சிங்கப்பூரில் பல இடங்களில் கண்ணைக் கவரும் வகையில் ஒளியூட்டுகள் இடம்பெற்று இருக்கின்றன. அதில் பலரும் விரும்பிச் செல்லக்கூடிய இடம் கரையோரப் பூந்தோட்டங்கள் என்று அழைக்கப்படும் ‘கார்டன்ஸ் பை த பே’.
அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டிவிட்டன. அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் கிறிஸ்துமஸ் வொண்டர்லேண்டில் ஆயிரக்கணக்கான விளக்குகள் பல வண்ணங்களில் ஒளி வீசிக்கொண்டு இருக்கின்றன. இந்த வொண்டர்லேண்ட் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் ஜனவரி 1 வரை மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை திறந்திருக்கும். நான்கு வெவ்வேறு நேரங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்படி மாலை 6.30, 7.30, 8.30, 9.30 ஆகிய நான்கு நேரங்களில் உள்ளே செல்ல நுழைவுச் சீட்டுகள் விற்கப்படுகின்றன. நுழைவுச் சீட்டுகளை இணையத்தில் முன்பதிவு செய்யவேண்டும். பார்வையாளர்கள் வொண்டர்லேண்டில் நுழைவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.