தாத்தா தினமும் காலை எழுந்ததும் பைபிள் படிப்பார்.
அதைத் தினமும் பார்க்கும் அவருடைய பேரன் ஜான் ஒருநாள், “தாத்தா, இதை எத்தனை நாள்களாக படிக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு தாத்தா சாம்சன், “அறுபது ஆண்டுகளாகப் படிக்கிறேன்,” என்றார்.
“அப்படியென்றால் இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்குமே! பிறகு ஏன் மீண்டும் மீண்டும் படிக்கிறீர்கள்?” என்றான்.
தாத்தா சிரித்துக்கொண்டே, “இந்தக் கூடையில் தண்ணீர் பிடித்து வருகிறாயா?” என்று கேட்டுவிட்டு அழுக்குக் கூடை ஒன்றை ஜானிடம் கொடுத்தார்.
ஜானும் அருகில் இருந்த குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து வந்தான். ஆனால் தாத்தாவிடம் வருவதற்குள் கூடையில் இருந்த தண்ணீர் கீழே ஒழுகி வெறும் கூடையுடன் நின்றான்.
இருந்தாலும் தாத்தா சொன்னதற்காக மீண்டும் மீண்டும் தண்ணீர் பிடித்தான்.
“தாத்தா இந்தக் கூடை ஓட்டை ஓட்டையாக இருப்பதால் தண்ணீர் கீழே ஒழுகி விடுகிறது,” என்று வருத்தத்துடன் கூறினான்.
தொடர்புடைய செய்திகள்
தாத்தா ஜானிடம், “நான் முன்பு உன்னிடம் மூங்கில் கூடையைக் கொடுக்கும்போது அழுக்காக கறுப்பாக இருந்தது. ஆனால் மீண்டும் மீண்டும் தண்ணீர் பிடித்ததால் கூடையில் இருந்த அழுக்கு எல்லாம் போய் கூடை எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்று பார்த்தாயா? அதுபோலத்தான் இந்த பைபிளை ஒவ்வொரு முறையும் படிக்கும்போதும் உள்ளத்திற்குள்ளே இருக்கும் அழுக்கும் கறையும் சுத்தமாகி கொண்டே இருக்கும்,” என்றார் தாத்தா.
பேரன் ஜானுக்கு தாத்தாவின் விளக்கம் மிகவும் பிடித்துப் போனது.
உடனே, “தாத்தா, எனக்குள்ளேயும் நிறைய அழுக்கு இருக்கிறது. எனக்கும் அந்த பைபிள் கிடைக்குமா?” என்றான்.
“நிச்சயமா ஜான்” என்றபடி தாத்தா அவனுக்கு ஒரு பைபிளைக் கொடுத்தார்.

