லிஷாவின் பொங்கல் வண்ணம் தீட்டும் போட்டிகள்

2 mins read
990e2981-3322-4679-9657-25151e2cc46e
சிறுவர்கள் வண்ணம் தீட்டுகிறார்கள். - படம்: மோனலிசா

சிறுவர்கள் மத்தியில் பொங்கல் பண்டிகையின் சிறப்பு அம்சங்களை உணர்த்தும் வகையில் இம்மாதம் 13ஆம் தேதி ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கமும் இந்திய மரபுடைமை நிலையமும் இணைந்து சிறுவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

மூன்று பிரிவுகளில் நடந்த இப்போட்டிகளில் 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். அன்றைய தினம் காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை இந்திய மரபுடைமை நிலையத்தில்

5 வயதிலிருந்து 6 வயது வரை,

7 வயதிலிருந்து 12 வயது வரை என இரு பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. போட்டியில் மாடு, பொங்கல் பானை, ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் இளையர் என பொங்கல் பண்டிகை சார்ந்த படங்களுக்கு மாணவர்கள் வண்ணம் தீட்டினர்.

அதே நேரத்தில் பொலி @ கிளைவ் ஸ்திரீட்டில்

13 வயதிலிருந்து 16 வயது வரையிலான மாணவர்களுக்கு மண் பானைகளில் வண்ணம் தீட்டும் போட்டியும் நடத்தப்பட்டது.

மண் பானைகளுக்கு விதவிதமாக வண்ணம் தீட்டி ஜொலிக்கும் வண்ண கற்கள் வைத்து அலங்காரம் செய்து மாணவர்கள் தங்கள் புத்தாக்கத் திறனை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செய்த முதல் மூன்று மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

“இளம் பிள்ளைகள் மத்தியில் நம் பாரம்பரியத்தையும் மரபுடைமையையும் கற்றுக்கொடுக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்தப் போட்டியை நடத்தி வருகிறோம். போட்டிக்கு வரும் சிறுவர்கள் பொங்கல் பண்டிகையைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இதன்மூலம் கிடைக்கிறது,” என்று கூறினார் லிஷாவின் தலைவர் ரெகுநாத் சிவா.

தன்னுடைய 6 வயது மகளை போட்டிக்கு அழைத்து வந்திருந்த தனியார் வங்கியில் பணிபுரியும் முத்துராமன், 42, “வார இறுதி நாளாயினும் இன்றைய போட்டிக்கு என் மகள் விரைவாகவே எழுந்து தயாரானது ஆச்சரியமாக இருந்தது. மிகுந்த உற்சாகத்துடன் போட்டியில் கலந்துகொண்டார். தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு தமிழ் பாரம்பரியம் சார்ந்த போட்டிகளை நடத்த வேண்டும்,” என்று கூறினார்.

“நான் மாடு படத்திற்கு வண்ணம் தீட்டினேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அம்மா, அப்பா, தங்கையுடன் வந்திருந்தேன். லிட்டில் இந்தியாவில் உள்ள பொங்கல் பொருள்கள் விற்கும் கடைகளையும் சுற்றிப் பார்த்தோம்,” என்று கூறினார் 5 வயதாகும் ஆத்யுகன் அபிஜித்தன்.

“இந்தப் போட்டிக்கு பதிவு செய்த நாளிலிருந்தே மகள் மிகவும் ஆர்வமாக இருந்தாள். பொங்கல் பண்டிகையைப் பற்றி அவள் தானாகவே அதிகம் கேட்டுத் தெரிந்துகொண்டது மகிழ்ச்சியளித்தது. இந்த வயதில் அவர்கள் மனதில் நம் வரலாற்றை பதிய வைக்க வேண்டும். அதற்கான வாய்ப்பாகவே இந்தப் போட்டி அமைந்தது,” என்று கூறினார் போட்டிக்கு தன் மகளை அழைத்து வந்திருந்த இல்லத்தரசியான சிவப்பிரியா பாலமுருகன், 28.

“பானைக்கு வண்ணம் தீட்ட முந்தைய நாளிலிருந்தே நானும் அம்மாவும் கலந்துரையாடினோம். இந்தப் போட்டி கலை ஆர்வத்தை தூண்டியதோடு பொங்கல் பண்டிகை பற்றிய புரிந்துணர்வையும் கூட்டியது,” என்று கூறினார் உயர்நிலைப் பள்ளி மாணவியான அட்சயா சுப்புராமன்.

குறிப்புச் சொற்கள்