மாணவர்களுடன் களைகட்டிய பொங்கல்

மாணவர்களுடன் களைகட்டிய பொங்கல்

2 mins read
f4830fd7-bbf3-4f85-91d7-ec024878e920
மாடுகளை வேடிக்கைப் பார்க்கிறார்கள் மாணவர்கள். - படம்: அனுஷா செல்வரத்தினம்
Google News Preferred Icon

தைத் திருநாளை முன்னிட்டு ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமை சங்கமும் இந்திய மரபுடைமை நிலையமும் இணைந்து பொதுமக்களுக்காக பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன.

அவ்வகையில் பள்ளி மாணவர்கள் பொங்கல் திருநாளின் பாரம்பரியத்தையும் விழுமியங்களையும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

வியாழக்கிழமை மதியம் கிளைவ் ஸ்திரீட்டில் அமைந்துள்ள பொலி திறந்தவெளியில் ஏழு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் சார்ந்த நடவடிக்கைகளில் பங்குகொள்ள வந்திருந்தனர்.

மாணவர்கள் பொங்கல் திருநாளின் கலாசாரத்தை அறிந்துகொள்ள அவர்களுக்கு நடவடிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் அவர்கள் படங்களுக்கு வண்ணம் தீட்டுவதிலும் நாட்டுப்புற கலைகளைப் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்வதிலும் நேரத்தை செலவிட்டனர்.

தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் மாணவர்களுக்கு மயிலாட்டம், உறியடி, நாதஸ்வர இசை, கரகாட்டம், பறையிசை ஆகிய கலைகளை விளக்கினர். மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்கள் அக்கலைகளை அனுபவித்துப் பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

மாணவர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிறகு கலைஞர்கள் வழங்கிய சிறப்பு நாட்டுப்புற கலை நிகழ்ச்சியையும் கண்டு களித்தனர்.

“நான் பள்ளியில் பொங்கலை பற்றி கற்றிருந்தேன். சூரியனுக்கும் உழவர்களுக்கு உதவும் மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் பண்டிகை பொங்கல் திருநாள். வீட்டில் பெற்றோர்கள் பொங்கல் திருநாளைப் பற்றி விளக்கி இருந்தாலும் இன்று நான் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது என்னால் பொங்கலைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது,” என்றார் பூன் லே கார்டன் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பில் பயிலும் அக்‌ஷரா ஸ்ரீ.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்