தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனப் பெருநாள் கொண்டாட்டம்

3 mins read
bc4e7b72-77b0-4891-a1a8-fe6015e48364
சீனப் பெருநாள் அலங்காரம். - படம்: ஊடகம்

வீட்டைச் சுத்தம் செய்தல்:

வீட்டைச் சுத்தம் செய்வது சீனப் புத்தாண்டின் முக்கிய பாரம்பரியமாகும். தரை, சுவர், வீட்டின் ஒவ்வொரு மூலையும் சுத்தம் செய்யப்படுகின்றது. சீன மொழியில் ‘Dust’ என்பது பழையவை என்று பொருள்படும். தமிழர்களின் போகி பண்டிகை நாளில் சுத்தம் செய்வதுபோல பழைய பொருட்களையெல்லாம் அகற்றி புதிய தட்டுகளையும் புதிய அறைகலன்களையும் வாங்கி அலங்கரித்து புதிய தொடக்கத்திற்குத் தயாராகிறார்கள். ஆனால், புத்தாண்டு தினத்தன்று வீட்டைப் பெருக்க மாட்டார்கள். அவ்வாறு செய்வது, வீட்டில் இருக்கும் செல்வங்களைப் பெருக்கி வெளியே தள்ளுவதற்குச் சமம் என்பது அவர்களின் நம்பிக்கை.

சிவப்பு வண்ணம்:

வீட்டைச் சுத்தம் செய்த பிறகு சிவப்பு நிறத்தாலான அலங்காரங்களைத் தொங்க விடுவார்கள். வீட்டின் சன்னல், கதவுகளுக்கு சிவப்பு வண்ணத்தில் திரைத்துணிகளை தொங்க விடுவிடுவார்கள். புத்தாண்டு அன்று அனைவரும் சிவப்பு வண்ணத்தில் உடை உடுத்துவார்கள்.

‘டம்ப்ளிங்ஸ்’ உணவு:

சீனப்புத்தாண்டின்போது ‘டம்ப்ளிங்ஸ்’ முக்கிய உணவாகும். மாவில் செய்யப்பட்ட உருண்டையில் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளே பல்வேறு உணவுப் பொருள் நிரப்பப்பட்டிருக்கும். புத்தாண்டு தினத்தின் முந்தைய நாள், புத்தாண்டு மற்றும் புத்தாண்டின் 5வது நாளில் ‘டம்ப்ளிங்ஸ்’ சாப்பிடுவது ஒரு வழக்கமாகும்.

சீனப் புத்தாண்டு முந்தைய நாள்:

குடும்ப ஒன்றுகூடல் விருந்து, மூதாதையர்களை வழிபடுவது ஆகியவை புத்தாண்டுக்கு முன்னதாக சீனர்கள் பின்பற்றும் புத்தாண்டின் இரு முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.

சீனப் புத்தாண்டின் முக்கியப் பாரம்பரியங்களில் சீனர்களின் ஒன்றுகூடல் விருந்தும் (reunion dinner) ஒன்றாகும். சீனப் புத்தாண்டிற்கு முன்தினம், மகன்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வர். அதுபோல திருமணமான மகள்கள் கணவரின் குடும்பத்தினரோடு ஒன்றுகூடல் விருந்தில் கலந்துகொள்வர்.

விருந்தில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி இரவு உணவை உண்டு மகிழ்வது வழக்கம். அந்த நிகழ்வு குடும்ப உறவுகளையும் பிணைப்பையும் வலுப்படுத்த கை கொடுக்கிறது.

இரவு விருந்து

எவ்வளவு தொலைவில் இருந்தாலும் புத்தாண்டு குடும்ப விருந்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடுவது வழக்கமாக இருந்து வருகிறது. விருந்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆடம்பர உணவுகள் பரிமாறப்படுகின்றன.

அன்று இரவு ‘லோ ஹை’ (Lo hei) என்று அழைக்கப்படும் ‘யூசெங்’ (Yusheng) உணவில் வெள்ளை முள்ளங்கி, காரட், வெள்ளரிக்காய், சமைக்கப்படாத மீன், எள் விதைகள், இஞ்சி என பல அம்சங்கள் அடங்கியிருக்கும்.

குடும்பத்தினர், மேசையின் நடுவில் Yusheng கொண்ட தட்டை வைத்து உணவைத் தூக்கிக் கலப்பது வழக்கம். அவ்வாறு, தூக்கித் தூக்கிக் கலக்கும்போது அவர்கள், விருந்தில் கூடிய உறவினர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைச் சத்தமாகக் கூறி மகிழ்வர். பாரம்பரியமாக, yu sheng உணவு உயரமாகத் தூக்கிக் கலக்கப்படும். அவ்வாறு செய்வது அந்த ஆண்டில் அதிர்ஷ்டத்தை உயர்த்தும் என்பது சீனர்களின் நம்பிக்கை

சிவப்பு உறை:

அதிர்ஷ்டப் பணம் என்றழைக்கப்படும் சிவப்பு உறையை (ஹொங் பாவ்) குடும்பத்தின் பெரியவர்கள் முன்பே குழந்தைகளுக்காகத் தயாரித்து குடும்ப ஒன்றுகூடல் விருந்திற்குப் பிறகு கொடுப்பார்கள். குழந்தைகள் ஆண்டு முழுவதும் பாதுகாப்பாகவும் வளமாகவும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த அதிர்ஷ்டப் பணம் வழங்கப்படுகிறது. இன்றும் இந்தப் பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. பணத்தின் அளவு மட்டுமே மாறியுள்ளது. குழந்தைகள் இதனை புத்தகங்கள் உள்ளிட்ட பள்ளிக்குத் தேவையான எழுதுப் பொருட்களை வாங்கப் பயன்படுத்துகின்றனர். சில குடும்பத்தினர் பிள்ளைகளின் எதிர்கால பயன்பாட்டிற்காகச் சேமித்து வைக்கின்றனர்.

ஆரஞ்சுப் பழங்களை அளிப்பது

தீபாவளியன்று நாம் பட்டாசு வெடித்து கொண்டாடுவதைப் போல சீனர்களின் புத்தாண்டு பட்டாசு இல்லாமல் நிறைவடையாது. சிங்கப்பூரில் மத்தாப்புகள் மட்டும் கொளுத்தி கொண்டாடுகிறார்கள். சீனாவில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்.

புத்தாண்டின் முதல் 15 நாட்களுக்கு உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று மேண்டரின் ஆரஞ்சுப் பழங்களைப் பரிமாறிக்கொள்வது வழக்கம். கேண்டனீஸ் மொழியில் ‘மேண்டரின் ஆரஞ்சுகளை அளிப்பது’ என்பதற்கு ‘தங்கத்தை அளிப்பது’ என்பது போல் ஒலிக்கும். இதனால், ஆரஞ்சுப் பழங்களை அளிப்பது தங்கத்தை வழங்குவதற்குச் சமம் என்றே சீனர்கள் நம்புகின்றனர்.

அவர்களின் புத்தாண்டு நிகழ்ச்சியில் முக்கியம் அங்கம் வகிக்கிறது இந்த மேண்டரின் ஆரஞ்சுகள். வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் இரண்டு ஆரஞ்சுகளை வழங்குவார்கள்.

விளக்குத் திருவிழா:

முதல் சந்திர மாதத்தின் 15வது நாளில் கொண்டாடப்படும் விளக்குத் திருவிழா, புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் நிறைவைக் குறிக்கிறது. அன்று மாலையில் வெவ்வேறு வடிவங்களில் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. பண்டைய காலங்களில் மெழுகுவத்தி உள்ளே வைக்கப்பட்டு காகிதம் அல்லது பட்டுத் துணியால் விளக்குகள் செய்யப்பட்டன. தற்போதைய உலகில் மெழுகுவத்திகளுக்குப் பதிலாக மின்விளக்குகள், எல்.ஈ.டி விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. விளக்குத் திருவிழாவில் மற்ற இனத்தவர்களும் பங்கேற்று மகிழ்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்