தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இன்பம் பொங்கும் சிறுவர்களின் பொங்கல்

2 mins read
5985efd9-095a-4da1-812b-82dbf82e2b19
ரவி சிங்காரம் - படங்கள்: ரவி சிங்காரம்

ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 28ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தின் ஏற்பாட்டில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

பொங்கல் பாரம்பரியம் அடுத்த தலைமுறையிலும் தழைத்தோங்கி நிற்கும் என்பதற்கு சான்றாக ஆர்வத்துடன் பங்கேற்றனர் சிறார்கள்.

நம் பல்லின சமுதாயத்தின் அடையாளமாக சீனச் சிறுவர்கள்கூட வந்திருந்தனர்!

பொங்கல் பொங்கி வழிந்தபோது ‘பொங்கலோ பொங்கல்!’ என கூறுவது மட்டுமன்றி குலவை எனும் மங்கல ஒலியையும் எழுப்பி அவர்கள் மகிழ்ந்தனர்.

மாட்டுக்கும் கன்றுக்கும் உணவு கொடுத்து, மாலையிட்டு அவற்றின் அழகையும் அவர்கள் ரசித்தனர்.

பொங்கல் பானைகளுக்கு ஓவியம் வரைதல், பொங்கல் வரைபடங்களுக்கு வண்ணம் தீட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் சிறுவர்கள் ஈடுபட்டு பொங்கலைப் பற்றி மேலும் கற்றுக்கொண்டனர்.

பொங்கல் பானைக்கு ஓவியம் வரைதல் போட்டி நடைபெற்றது.

போட்டியில் கலந்து கொண்டவர்களில் முதலாவதாக 8 வயது வெண்பா, இரண்டாவதாக 9 வயது ஜோஷித்து, மூன்றாவதாக 12 வயது அன்ஜலினா வெற்றி பெற்றனர்.

ஒரு சிறப்புப் பரிசை வெண்பா என்ற அதே பெயரைக் கொண்ட மற்றொரு 9 வயதுச் சிறுமியும் வென்றார். அவர்கள் சிறப்பு விருந்தினரிடம் பரிசுகளைப் பெற்றனர்.

முறத்தில் அரிசியைப் புடைத்தல், உரல், உலக்கையில் நெல் குத்துதல் போன்றவற்றைப் பற்றியும் சிறுவர்கள் அறிந்துகொண்டனர்.

பொங்கல் சார்ந்த ஆடல், பாடல், பேச்சு, சிலம்பாட்டம் ஆகியவற்றில் தம் திறன்களைக் காண்பித்து, தம் பெற்றோரை மட்டுமன்றி, பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தினர்.

பொங்கல் பண்டிகையின் அறநெறிகளை மனத்தில் கொள்ளுங்கள்

பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. அது போதிக்கும் அறநெறிகளையும் கற்றுக்கொள்ளவேண்டும்.

விவசாயத்துக்குத் துணைபுரியும் சூரியன், பால் கொடுக்கும் மாட்டுக்கு நன்றி செலுத்துவது போலவே, உங்கள் வாழ்வில் கிடைத்துள்ள பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்களையும் என்றும் மறவாதீர்கள்.

அனைவரது வாழ்விலும் இன்பம் பொங்கும் வகையில் கருணைமிக்க செயல்களை மேற்கொண்டு தலைசிறந்த மனிதர்களாக உருவெடுங்கள்!

குறிப்புச் சொற்கள்