உலகெங்கிலும் பல காற்பந்தாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் புகழ்பெற்ற முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் கோல்காப்பாளர் பீட்டர் ஷுமைக்கல் அண்மையில் சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.
பிப்ரவரி 3ஆம் தேதி சனிக்கிழமைஅன்று, கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளைச் சந்தித்தார் ஐந்துமுறை பிரீமியர் லீக் பட்டம் வென்ற பீட்டர் ஷுமைக்கல்.
அந்தப் பள்ளியில் பயிலும் 7 முதல் 13 வயது வரையிலான இளம் காற்பந்தாளர்களுடன் உரையாடினார். மாதிரி செய்தியாளர் சந்திப்பில் சிறுவர்கள் பீட்டர் ஷுமைக்கலுடன் உரையாடினர்.
“உங்கள் பயிற்றுவிப்பாளர்கள் சொல்வதைக் கேட்டு செயல்படுங்கள். காற்பந்து, மட்டுமல்ல, நீங்கள் எந்த பயிற்சி எடுத்தாலும் அதற்கு இது பொருந்தும்.
“நான் இந்நிலையை அடைவதற்குக் காரணம், குறுக்கு வழிகளைத் தேடாமல் கடுமையாக முயற்சி செய்ததே,” என்றார் ஷுமைக்கல்.
ஷுமைக்கலின் முன்னிலையில், ‘வெஸ்ட் ஹேம் யுனைடெட்’, ‘பர்ன்லீ’ சமூகப் பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து காற்பந்துப் பயிற்சி பெற்றனர் சிறுவர்கள். “பயிற்சியில் ஒரு சிறுமியின் திறனைக் கண்டு நான் வியந்தேன்,” என்று கூறிய ஷுமைக்கல், பெண்களையும் காற்பந்து விளையாடுவதற்கு ஊக்குவித்தார்.
“காற்பந்து என்பது தொலைக் காட்சியில் காண்பதையும் தாண்டியது. அது ஓர் உணர்வு. கல்வி முக்கியம்தான். ஆனால் மனமகிழ்ச்சிக்கு விளையாட்டும் அவசியம்,” என்றார் ஷுமைக்கல்.
தொடர்புடைய செய்திகள்
எதிர்காலத்தில் உலக மேடையில் சிங்கப்பூர் காற்பந்தாளர்கள் அசத்துவதற்கு வாழ்த்திய ஷுமைக்கல், அதற்குப் பெற்றோர், சமூகத்தின் ஆதரவும் அவசியம் என்றார்.
காற்பந்து ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்துள்ள இங்கிலிஷ் பிரிமீயர் லீக் (இபிஎல்), மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி), ஸ்டார்ஹப்புடன் இணைந்து, வசதி குறைந்த சிறுவர்களுக்காக வழங்கும் ‘ஜூனியர் ஸ்டார்ஸ்’ திட்டத்தின்கீழ் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இத்திட்டத்தை ஆதரிப்பதற்காக ‘பிரிமீயர் லீக்’ அமைப்பு, ஷுமைக்கலுடனான இச்சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தது.
‘ஜூனியர் ஸ்டார்ஸ்’ திட்டம், 40 வாரங்களுக்கு வாழ்க்கைத் திறன் பாடங்களையும் விடுமுறைநாள் பயிலரங்குகளையும் வழங்குகிறது. 2011 முதல் 7,000 சிறுவர்கள் இதன்வழி கல்வி வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்திற்கு பள்ளிகளும் சமூக அமைப்புகளும் மாணவர்களை PA_CentralSingapore@pa.gov.sg என்ற மின்னஞ்சலில் முன்மொழியலாம்.
மேல்விவரங்களுக்கு https://centralsingapore.cdc.gov.sg/programmes/lifelong-learning/nurture/ இணையத்தளத்தை நாடலாம்.

