எந்நிலை வந்தாலும் தன்னிலை மறக்கக்கூடாது

எந்நிலை வந்தாலும் தன்னிலை மறக்கக்கூடாது

2 mins read
65fbc451-8e39-46cc-913d-aad88ee457a2
கழுதை. - படம்: ஊடகம்

ராமு தன்னுைடய வீட்டில் ஒரு கழுதையையும் ஒரு நாய்க்குட்டியையும் வளர்த்து வந்தார்.

கழுதை அவர் செல்லும் இடங்களுக்கு அவரது சுமைகளைச் சுமந்து செல்லும். அதனால் அவர் அதற்கு விருப்பமான உணவைக் கொடுத்து பாசமாக வளர்த்து வந்தார்.

கழுதையும் தன்னைப்போல் இந்த உலகில் யாருமே மகிழ்ச்சியாக இல்லை என்று இறுமாப்புடன் இருந்தது.

ஒருநாள் ராமு தோட்டத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தார். அப்போது அவரது நாய்க்குட்டி ஓடி வந்து அவரின் மடியில் அமர்ந்துகொண்டது.

அவரைத் தன்னுடய நாக்கால் தடவியதையும் அவர்மேல் தன்னுைடய முகத்தை வைத்துப் பாசமாகத் தேய்ப்பதையும் பொறாமையுடன் பார்த்துக்கொண்டு நின்றது கழுதை.

ராமுவும் நாய்க்குட்டியின் தலையைத் தடவிக்கொடுத்து, அதனுடன் கொஞ்சி விளையாடினார். அதற்கு விலை உயர்ந்த ரொட்டித் துண்டுகைளக் கொடுத்தார்.

நாய்க்குட்டியும் அதை விரும்பி உண்டது. இவற்றையெல்லாம் கண்களில் கோபம் கொப்புளிக்க பார்த்துக்கொண்டு நின்றது கழுதை.

‘நாம்தானே முதலாளியின் உடைமைகளைப் பத்திரமாகச் சுமந்துகொண்டு வெளியே செல்கிறோம். அப்படி இருக்கும்போது இந்த நாய்க்குட்டியை இப்படிக் கவனிக்கிறாரே! ‘ என்று கோபத்துடன் நினைத்தது கழுதை.

உடனே தானும் நாய்க்குட்டிையப்போல அவரின் மடியில் அமர்ந்து அவரைக் கொஞ்ச வேண்டும் என்று நினைத்து ராமுவை நெருங்கியது கழுதை.

அருகில் சென்றதும் தன்னுடய இரண்டு முன்னங்கால்களைத் தூக்கி ராமுவின் தோள்களில் வைத்தது. அத்துடன் நில்லாமல் தன்னுடைய நாவால் அவரின் முகத்தைத் தடவ நாக்கை நீட்டியது.

அருகில் நின்றுகொண்டு இருந்த வேலையாள், ‘இந்தக் கழுதை நம் முதலாளியைக் காயப்படுத்தப்போகிறது’ என்று நினைத்து அருகில் இருந்த கம்பை எடுத்து வேகமாகக் கழுதையை அடித்தார்.

வலி தாங்க முடியாமல் கழுதை கத்தியது. அன்றிலிருந்து முதலாளியும் கழுதையின் அருகில் வருவதே இல்லை. அதனால், ‘நான் முன்பு இருந்ததுபோலவே இருந்திருந்தால் எஜமானர் என்னுடன் பாசத்துடன் பழகி இருப்பார்.

‘என்னுடைய நிலையை உணராமல் மற்றவர்களைப்போல நடக்கத் தொடங்கியதால் இந்த நிலை எனக்கு ஏற்பட்டது’ என்று வருந்தியது கழுதை.

எந்நிலை வந்தாலும் தன்னிலை மறக்கக்கூடாது என்பதைக் காலம் கடந்து உணர்ந்துகொண்டது கழுதை.

ரமேஷ் குமார் ரக்ஷரன் உயர்நிலை 1, இராஃபிள்ஸ் கல்வி நிலையம்

குறிப்புச் சொற்கள்