தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலந்து கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய எட்டு வயது சதுரங்க வீரர் அஷ்வத்

2 mins read
b5196066-3f69-4a9e-9d93-ccfe7f5979b8
அஷ்வத் கௌசிக் - படம்: ஊடகம்

தனது 4 வயதிலிருந்தே சதுரங்கம் விளையாடி வரும் சிங்கப்பூரைச் சேர்ந்த எட்டு வயது மாணவர் அஷ்வத் கௌசிக், ‘கிளாசிக்கல்’ சதுரங்க விளையாட்டில் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய ஆக இளைய சதுரங்க வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார் .

கடந்த 18 பிப்ரவரி 2024 அன்று சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்த போட்டியின் நான்காம் சுற்றில் 37 வயதான போலந்து கிராண்ட்மாஸ்டர் ஜசெக் ஸ்டோபாவை தோற்கடித்து அந்த சாதனையை இவர் படைத்துள்ளார்.

ஒரு வாரம் முன்பு ஒன்பது வயதுக்குட்பட்ட கிளாசிக்கல் செஸ்ஸில் கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்த இளம் வீரர் என்ற செர்பியாவின் லியோனிட் இவானோவிச்சின் சாதனையை முறியடித்துள்ளார் அஷ்வத்.

இதுவரையில் 8 வீரர்கள் மட்டுமே பத்து வயதுக்குட்பட்ட நிலையில் கிளாசிக்கல் சதுரங்க கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்தவர்கள் எனும் பெருமையைப் பெற்றவர்கள். அதில் அஷ்வத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“எனக்கு சதுரங்கம் விளையாடுவது மிகவும் பிடிக்கும். என் தந்தை சொல்லித்தந்தபடி தன்னம்பிக்கையுடனும் தைரியமாகவும் விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி. நன்கு பயிற்சி எடுத்ததால் என்னை விட வயதில் மிகவும் மூத்த கிராண்ட்மாஸ்டருடன் விளையாடி வென்றுள்ளேன். எல்லோரும் என்னைப் பாராட்டுவது உற்சாகமாக இருக்கிறது” என்றார் மாணவர் அஷ்வத்.

“கொள்ளை நோய்க் காலகட்டத்தில் பயிற்சி எடுக்க நிறைய நேரம் இருந்தது. பல இணைய வழி போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற வாய்ப்பு கிட்டியது. அவர் பெற்ற வெற்றிகளையும் அவனுக்கு இருந்த ஆர்வத்தையும் பார்த்து அனைத்துல போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவித்தோம். அவன் இந்த வெற்றி பெற்றது எங்களுக்கு மிகவும் பெருமை,” என்றார் அஸ்வத்தின் தாயார் கிருத்திகா கௌஷிக்.

தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் இவரது தந்தை கௌஷிக் ஸ்ரீராம், சதுரங்க விளையாட்டு நுணுக்கங்கள் குறித்து பகிர்வது, குறிப்பிட்ட கூறுகளை கற்றுக்கொள்ள உரிய பயிற்சியாளரை அணுகுவது உள்ளிட்டவற்றை செய்கிறார்.

வகுப்புகளுக்கும் போட்டிகளுக்கும் அழைத்து செல்கிறார் தாயார். இவ்வாறு பொறுப்புகளை பிரித்துக்கொள்வதால், நேரத்தை நிர்வாகம் செய்ய முடிவதாகச் சொல்கின்றனர் பெற்றோர்.

கல்வியிலும் சிறந்து விளங்கும் அஷ்வத், எதிர்காலத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதோடு, உலக சாம்பியன் பட்டம் பெற வேண்டும் என விரும்புகிறார். அதற்கு தொடர்ந்து உழைப்பையும் பயிற்சியையும் எடுப்பதாகச் சொல்கிறார் அஷ்வத்.

குறிப்புச் சொற்கள்