வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியர் மேசை மீதிருந்த கண்ணாடிக் குவளையைக் கையில் எடுத்து, “இது எவ்வளவு எடை இருக்கும்?” என்று மாணவர்களிடம் கேட்டார்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு எடையைச் சொன்னார்கள்.
ஆசிரியர்: இதன் எடை எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய கேள்வி அதுவல்ல. இந்தக் குவளையை அப்படியே நான் கையில் பிடித்துக்கொண்டு ஒரு மணி நேரம் நின்றால் என்ன ஆகும்?
மாணவர்கள்: உங்களுக்குக் கைவலிக்கும் ஆசிரியர்.
ஆசிரியர்: மூன்று மணி நேரம் பிடித்துக் கொண்டிருந்தால்?
மாணவர்கள்: உங்களின் கை மரத்துப்போகும் ஆசிரியர்.
ஆசிரியர்: நீங்கள் சொல்வது சரி. ஒரு மணி நேரத்தில் என் கை வலிக்கத் தொடங்கும், இரண்டு மணி நேரத்தில் கை மரத்துப் போகத் தொடங்கும். அப்படி என்றால், நேரம் போகப் போக குவளையின் எடை அதிகரித்துக்கொண்டே போகுமா?
மாணவர்கள்: இல்லை ஆசிரியர். குவளையின் எடை அப்படியேதான் இருக்கும். மாறாது.
தொடர்புடைய செய்திகள்
ஆசிரியர்: கை வலிக்காமல், கை மரத்துப்போகாமல் இருக்க நான் என்ன செய்யவேண்டும்?
மாணவர்கள்: குவளையைக் கீழே வைக்கவேண்டும் ஆசிரியர்.
ஆசிரியர்: ஆமாம். சுமையை சுமந்துகொண்டு இருந்தால்தான் வலி. அதுபோல் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை நினைத்துக்கொண்டு இருந்தால் தலைவலிக்கும். தொடர்ந்து மணிக் கணக்காக அதையே நினைத்துக்கொண்டு இருந்தால் மூளை செயலிழந்து மரத்துபோகும். அதனால் அந்த நேரத்தில் அதை ஒதுக்கி வைத்துவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்கவேண்டும். பின்னர் அதை நீங்களே தீர்க்க முடியுமானால் தீர்க்கலாம். அல்லது உங்கள் பெற்றோரிடம் உதவி கேட்கலாம்.
மாணவர்கள்: நன்றி ஆசிரியர்.

