அரசர் தினமும் காலையில் எழுந்ததும் சாளரத்தைத் திறந்து சூரிய உதயத்தைப் பார்ப்பது வழக்கம்.
அன்றும் வழக்கம்போல சாளரத்தைத் திறந்தார். சூரியன் மேகத்திற்குள் மறைந்திருந்தது. ஏமாற்றத்துடன் திரும்பியவரின் கண்ணில் ஒரு பிச்சைக்காரர் தென்பட்டார்.
கோபத்துடன் இவரது முகத்தில் முழித்துவிட்டேனே என்று ஆத்திரத்துடன் திரும்பியவர் அருகில் இருந்த சுவற்றில் இடித்துக்கொண்டு நெற்றியில் ரத்தம் கொட்டியது. அவரால் வலியைத் தாங்க முடியவில்லை. இதற்குக் காரணம் பிச்சைக்காரர்தான். அவர் முகத்தில் விழித்ததால்தான் தனக்கு இந்த துன்பம் நேரிட்டது என்ற கோபம் அரசரின் தலைக்கு ஏறியது.
உடனே வேலையாளை அனுப்பி அந்த பிச்சைக்காரரை அழைத்து வர கட்டளையிட்டார். காவலர்கள் அவரை இழுத்து வந்து அரசரின் முன் நிறுத்தினர்.
அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரருக்கு மரண தண்டனை விதித்தார்.
பிச்சைக்காரர் கலங்கவில்லை. கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினார். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் ‘இந்த பிச்சைக்காரருக்கு எவ்வளவு தைரியம்? அரசர் முன்னால் இப்படி சிரிக்கிறாரே!’ என்று நினைத்தனர்.
அரசருக்கோ கோபம் கட்டுக்கடங்காமல் போனது. “எதற்கு சிரிக்கிறாய்?” என்று ஆத்திரத்துடன் வினவினார்.
“அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் நெற்றியில் சிறு காயம் மட்டும்தான் ஏற்பட்டது. ஆனால் உங்கள் முகத்தில் நான் விழித்ததால் என் உயிரேப் போகப் போகிறது. அதை நினைத்தேன். சிரித்தேன்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
மன்னனின் தலை தானாகவே கவிழ்ந்தது. தன்னுடைய தவற்றை உணர்ந்து தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரருக்கு பரிசு கொடுத்து அனுப்பி வைத்தார்.
தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறு பெயர். அது இல்லையென்றால் சமயத்தில் உயிரை காப்பாற்றிக்கொள்ள முடியால் போய்விடும். பிச்சைக்காரர் தனக்கு மரண தண்டனை கிடைத்துவிட்டதே என்று வருத்தத்துடன் பேசாமல் அமைதியாக இருந்திருந்தால் அவருடைய தரப்பு நியாயம் வெளியே தெரிந்திருக்காது. அவர் தான் எந்தத் தவறும் செய்யவில்லை, இந்த இக்கட்டான நிலையில் நாம் தைரியத்துடன் பேசாமல் இருந்தால் உயிர் போவது நிச்சயம் என்பதை அறிந்தே பயமின்றி பேசியதால் அவரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

