காற்பந்தாட்டத்தில் களமிறங்கிய இளம் கிரிஷவ்

3 mins read
24c39e13-2256-4e39-ae4a-3725a50d76ab
காற்பந்து திடலில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தருணமும் 14 வயது நிரம்பிய கிரிஷவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  - படங்கள்: தர்ஷினி
multi-img1 of 2

பிறந்து தவழும் முன்பே தனது தொட்டிலில் காற்பந்தை வைத்து விளையாடினார் கிரிஷவ் ராம். அவரது காற்பந்து விளையாட்டுப் பாதையை அன்றே உறுதி செய்தனர் அவரது பெற்றோர். 

கிரிஷவின் தந்தை, தமிழ்ச்செல்வன், 48, ஒரு முன்னாள் காற்பந்தாட்டக்காரர். உடல் நலக்குறைவினால் அவர் காற்பந்தாட்டத்தை கைவிடும் சூழ்நிலை ஏற்பட்ட போதிலும், தனது மகன் அவரது நற்பெயரை தொடர அவர் ஆசைப்பட்டார். 

“காற்பந்து மீதான ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். முதலில் இந்த விளையாட்டை அவருக்கு அறிமுகப்படுத்த நினைத்தோம். ஆர்வம் இருந்தால் பிறகு படிப்படியாக அவருக்கு உதவ தயாரானோம்,” என்றார் கிரிஷவின் தாயார், தர்ஷினி, 40. 

காற்பந்தை தவிர தற்காப்புக் கலைகளிலும் கிரிஷவ் சிறு வயதில் ஈடுபட்டார். ஆனால் அவருடைய வேட்கை காற்பந்து திடலில் மிகுந்து காணப்பட்டது. இதை அவருடைய பெற்றோர் வெகு விரைவாக உணர்ந்தனர். 

“காற்பந்து மீது அவருக்கு ஒரு நல்ல அணுகுமுறை இருந்ததால் அவரை நாங்கள் முறையான காற்பந்து பயிற்சிக்கு அனுப்ப முடிவெடுத்தோம்.”  

மூன்று ஆண்டுகள் ‘ஜெ.எஸ்.எஸ்.எல்’ காற்பந்து கழகத்தில் பயிற்சி பெற்ற கிரிஷவ், ஆறு வயதில் ‘லையன் சிட்டி சைய்லர்ஸ்’ காற்பந்து கழகத்தில் சேர்ந்தார். கழகத்தின் தொழில்முறை நிபுணத்துவமும், விளையாட்டாளர்களின் நலனை கூர்ந்து கவனிக்கும் முறையும் கிரிஷவை பெரிதும் ஊக்கமூட்டியது. இதனால், அவர் தொடர்ந்து பயிற்சிகளுக்கு சென்றார். 

தொடர்ந்த முறையான பயிற்சியினாலும் விடாமுயற்சியினாலும் ஒன்பது வயதில் கிரிஷவ் தனது 100வது காற்பந்தாட்ட கோலை சாதனைக்குரிய முறையில் புகுத்தினார்.

“காற்பந்தின் மூலம் எனக்கு கிடைத்த நண்பர்கள், அவர்களுடன் வளர்த்த பிணைப்பு, சவால்மிக்க இந்த விளையாட்டிலிருந்து உருவாகும் விவேகம் போன்ற நற்குணங்களை நான் கற்றுக்கொண்டேன். 

காற்பந்து திடலில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தருணமும் 14 வயது நிரம்பிய  கிரிஷவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 

“எதிரணியினரை விட நாம் எப்போதும் ஒரு அடி முன் இருப்பதே எந்த ஒரு விளையாட்டின் சவால் ஆகும். இது அடிப்படை வாழ்க்கைச் சூழலுக்கும் பொருந்தும்.” 

காற்பந்து விளையாட்டை கிரிஷவுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய அவரது தந்தை ஒரு இந்த பயணத்தில் ஒரு பெரிய வழிகாட்டி. 

“பெற்றோராகிய நாம், நம் பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவலாம் என்று யோசிக்க வேண்டும். அவர்களுடன் சேர்ந்து அந்த கனவுகளுக்கு கடினமாக உழைக்க வேண்டும்,” என்றார் தமிழ்ச்செல்வன். 

சிறு வயது முதல், தனது குடும்பத்தின் பேராதரவால் கிரிஷவ் காற்பந்து களத்தில் தேர்ச்சி பெறுவது மட்டுமல்ல, அதில் ஏற்படும் சவால்களைக் கடந்து வரும் மனப்பக்குவத்தையும் கொண்டுள்ளார். 

“எதிர்நோக்கும் சவால்களை நமக்கு சாதகமாக பயன்படுத்தி நாம் எப்படி முன்னேறலாம் என்று யோசிக்க வேண்டும் - என்றும் மனம் தளரக்கூடாது,” என்று புன்னகைத்தார் கிரிஷவ். 

திடலில் கிரிஷவ் தனது கால்வரிசையை காட்டும் ஒவ்வொரு போட்டி மற்றும் பயிற்சியிலும் அவருக்குப் பின்னால் ஒரு பெரிய ஆதரவு குழு இருக்கிறது என்றால் அது மிகையாகாது. 

“விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் தியாகம் - நமது பிள்ளைகள் சிறந்து விளங்க இவை அவசியம். இது கிரிஷவின் முயற்சி மட்டுமல்லாது ஒரு குடும்பமாக நாம் அவருக்கும் அவரது கனவுக்கும் செய்யும் கடமை.” என்றார் தர்ஷினி.  

இளம் வயதில் என்னென்ன சாதனைகள் என்று வாயைப் பிளக்க வைக்கும் அளவுக்கு காற்பந்தாட்டத்தில் திகழ்கிறார் கிரிஷவ் ராம். தொடர்ந்த வேகம், விவேகம் மற்றும் ஆதரவு அவருக்கு ஒரு ஆயுதமாக இருக்கும் தருணம், இந்த இளம் காற்பந்தாட்டக்காரர் கால் பதிக்கும் எந்த ஒரு களமும் அவருக்கு வெற்றி வாகை சூடும் என்பதில் சந்தேகமில்லை. 

குறிப்புச் சொற்கள்