அடர்ந்த காடு ஒன்றில் யானை தனது குட்டியுடன் வசித்து வந்தது. இரண்டும் தண்ணீர் குடிப்பதற்காக நீரோடையை நோக்கிச் சென்றன.
வழியில் குள்ளநரி ஒன்று எதிர்ப்பட்டது. குட்டி யானைக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காகக் குள்ளநரியைத் தாய் யானை விரட்டியடித்தது.
மீண்டும் நீரோடையை நோக்கி இரண்டும் நடக்க ஆரம்பித்தன.
திடீரென்று தாய் யானை, “சிங்கம் உறுமும் கர்ஜனை ஓசை கேட்கிறது மகனே! அந்த மரங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளலாம்.
“சிங்கம் தாகம் தணித்த பிறகு இங்கிருந்து சென்றுவிடும். பிறகு நாம் நீரோடைக்குச் சென்று தண்ணீர் குடிக்கலாம்,” என்றது அம்மா யானை.
உடனே அடர்த்தியாக வளர்ந்திருந்த மரங்களின் பின்னால் குட்டியானையுடன் மறைந்துகொண்டது தாய் யானை.
சிறிது நேரத்தில் சிங்கம் அங்கு வந்தது. அது தாகம் தீர தண்ணீரை அருந்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தது.
நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்த குட்டி யானை, “அம்மா! நீங்கள் நரியைத் துரத்தி அடித்ததுபோல் ஏன் சிங்கத்திடம் நடந்துகொள்ளவில்லை?” என்று கேட்டது.
தொடர்புடைய செய்திகள்
தாய் யானை பரிவுடன், “இரண்டும் மாமிசம் உண்ணும் விலங்குகள்தான். இருந்தாலும் நரியை எதிர்க்கும் வலிமை எனக்கு உண்டு. ஆனால் சிங்கம் பலம் வாய்ந்தது.
“அதனிடம் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள அதிகமாக போராட வேண்டும். ஆபத்து ஏற்படாமல் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமே தவிர, நாமாக வலியச் சென்று மாட்டிக்கொள்ளக் கூடாது. எதிராளியின் வலிமை அறிந்து செயல்பட வேண்டும். புரிந்ததா மகனே?” என்றது.
புரிந்ததற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிய குட்டி யானை, அன்னையின் மேற்பார்வையில் நீரோடையில் தண்ணீர் குடித்ததோடு உற்சாகமாகக் குளியலும் போட்டது.
நன்றி: கோகுலம்

