மணி தன்னுடைய நாயான டாமியை செல்லமாக வளர்த்து வந்தார். அந்த டாமியும் குடும்பத்தினருடன் அன்பாகப் பழகி வந்தது.
மணி அருகில் இருக்கும் சந்தையில் கடை வைத்து இருந்தார். தினமும் மணியின் தாயார் திருமதி கோமளா உணவு சமைத்து அதைப் பக்குவமாக கட்டுவார். பின்னர் அதை டாமியின் முதுகில் தொங்கவிடுவார்.
டாமியும் தினமும் அந்த உணவுப் பையை கீழே விழாமல் பத்திரமாக எடுத்துச் சென்று
திரு மணியிடம் கொடுக்கும்.
அதனால் வழியில் இருப்பவர்கள் டாமியின் இந்தச் செயலைப் பார்த்து பாராட்டத் தொடங்கினார்கள். இதுபோன்ற ஒரு நம்பிக்கையான நாயைப் பார்ப்பது அரிது என்று புகழ்ந்தார்கள்.
டாமிக்கு கிடைக்கும் அந்த புகழ்ச்சி அங்கு வசிக்கும் மற்ற நாய்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அதனால் எப்படியாவது டாமியின் நல்ல பெயரைக் கெடுக்கவேண்டும் என்று அவை முடிவு செய்தன.
ஒருநாள் டாமி உணவை எடுத்துச் செல்லும்போது டாமியை நிறுத்தி, “டாமி, தினமும் இப்படி சுமந்து செல்கிறாயே! ஒருநாளாவது அந்த உணவை சுவைத்துப் பார்க்கக்கூடாதா?” என்று டாமியிடம் பாசமாகப் பேசுவதுபோல் அந்த நாய்கள் அதன் மனதை மாற்றத் தொடங்கின.
ஆனால், டாமி இவர்கள் பேசுவதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் அன்றும் உணவைக் கொண்டு சென்று திரு மணியிடம் சேர்த்தது.
தொடர்புடைய செய்திகள்
சில நாள்கள் இப்படிக் கழிந்தன. தினமும் நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து டாமியை தங்கள் குழுவுடன் சேர்த்துக் கொள்வதாக ஆசை காட்டி, அவர்களின் வழிக்கு கொண்டுவர முயன்றன.
தினமும் அவை தன்னை ஒதுக்குவதையும் உணவை உண்டால் தன்னையும் அவர்களுடன் சேர்த்துக்கொள்வார்கள் என்ற நினைப்பில் மனம்மாறிய டாமி, தன் முதுகில் இருந்த உணவைக் கீழே வைத்து உண்ணத் தொடங்கியது.
அதைப் பார்த்த மற்ற நாய்கள் டாமியை தங்கள் வழிக்குக் கொண்டு வந்துவிட்டோம். இனிமேல் அதன் செயலால் யாரும் அதைப் புகழ மாட்டார்கள் என்று சொல்லி கேலி சொய்யத் தொடங்கின.
அப்போதுதான் அவற்றின் கெட்ட நோக்கத்தைப் புரிந்துகொண்டது டாமி. மற்றவர்கள் வற்புறுத்துகிறார்கள், தங்களுடைய கூட்டத்தில் சேர்த்துக்கொள்வார்கள் என்ற ஆர்வத்தில் தன்னுடைய நேர்மையைத் தவற விட்டதற்காக டாமி வருந்தியது. இனி இதுபோல் நடந்துகொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு வந்தது டாமி.
நீதி: நல்லவர்களாக, இருந்தால் பலருக்கும் பொறாமை வரும். அதனால் ஆளுக்கு ஒரு கருத்தைக் கூறுவார்கள். அவர்களுடன் இணைந்து தீய வழியில் செல்ல வற்புறுத்துவார்கள். பிறர் பேசுவதற்கெல்லாம் நம் இயல்பை மாற்றிக்கொண்டு இருந்தால் இறுதியில் நம் இயல்பை தேடிப் பிடித்திடும் நிலை நமக்கு வரும்.

