இடையர் ஒருவர் தன்னுடைய வீட்டில் பல ஆடுகளை வளர்த்து வந்தார்.
அது வெயில் காலம் என்பதால் ஆடுகளுக்கு வேண்டிய புல் கிடைக்கவில்லை. அதனால் அவர் தன்னுடைய நிலத்தில் விளைந்த புற்களை ஆடுகளுக்கு கொடுத்து வந்தார்.
திடீரென்று உணவு தேடி அலைந்த காட்டு ஆடுகள் அவருடைய விளைச்சல் நிலத்திற்கு வந்தன.
அவற்றைப் பார்த்த இடையர், ‘இவை தானாகவே நம்மிடம் வந்திருக்கின்றன. இவற்றுக்கு அதிக உணவு கொடுத்து பார்த்துக்கொண்டால் அவை இங்கேயே தங்கிவிடும்,’ என்று நினைத்தார்.
அதனால் தன்னுடைய வயலில் இருந்த புற்களை புது ஆடுகளுக்கு அதிகம் கொடுத்ததோடு, தன்னுடைய பழைய ஆடுகளுக்கு அவை உயிர் வாழ்வதற்குப் போதுமான புற்களை மட்டும் கொடுத்து வந்தார்.
வெயில் காலம் முடிந்து, மழைக்காலம் தொடங்கியது. காடு முழுவதும் பச்சை பசேல் என்று புற்கள் வளரத் தொடங்கின. மரங்கள் பூத்துக் குலுங்கின.
காட்டு ஆடுகள் தங்களுக்கு வேண்டிய உணவு காட்டில் கிடைத்துவிடும் என்பதால் அங்கிருந்து கிளம்பின.
அதைப் பார்த்த இடையர், “நான் உங்களுக்கு நிறைய உணவு கொடுத்தும் நீங்கள் இங்கேயே தங்காமல் உங்களின் வாழ்விடத்தை நோக்கிச் செல்கிறீர்களே!” என்று வருத்தமாகக் கேட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு அவற்றில் வயதான ஆடு ஒன்று, “நீங்கள் எங்களைப் பார்த்ததும் உங்களுடைய பழைய ஆடுகளுக்குப் போதுமான அளவு உணவு கொடுக்கவில்லை. எங்களை இங்கேயே தங்க வைக்கவேண்டும் என்ற ஆவலில் எங்களுக்கு அதிக உணவு கொடுத்தீர்கள்.
“நாங்களும் உங்களுடன் தங்கிவிட்டால், பழைய ஆடாக மாறிவிடுவோம். புது காட்டு ஆடுகள் எங்களைப்போல் இங்கு வந்தால் எங்களுக்குப் போதுமான உணவு கொடுக்க மாட்டீர்கள்.
“அதனால் நாங்கள் எங்கள் வழியைப் பார்த்துக்கொண்டு காட்டுக்கே செல்கிறோம்,” என்று கூறி காட்டை நோக்கிச் சென்றன.
புது ஆடுகள் வந்ததும் பேராசையில் அவற்றுக்கு அதிக உணவு கொடுத்து தன்னுடைய ஆடுகளுக்கு உணவைக் குறைத்ததை நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்தார் இடையர்.
நீதி: புதிய நண்பர்கள் கிடைத்தார்கள் என்பதற்காக பழைய நண்பர்களை மோசமாக நடத்துவது விவேகமற்றது.
விளைச்சல்: பயிர்கள் விளைந்த நிலம்
இடையர்: ஆடு மேய்ப்பவர்
புறக்கணித்தல்: அலட்சியம் செய்தல்

