பண்ணையார் தன்னுடைய தோட்டத்தில் ஓர் அழகிய சேவலையும் வாத்தையும் வளர்த்து வந்தார்.
தினமும் காலையில் சேவல் ‘கொக்கரக்கோ’ என்று கூவும். உடனே தூங்கிக்கொண்டு இருக்கும் வாத்து, வேகமாக எழுந்து வந்து சேவலைப் பார்த்து ‘குவாக் குவாக்’ என்று மகிழ்ச்சியுடன் பதில் அளிப்பதுபோல் கத்தும்.
பின்னர் இரண்டும் ஒன்றாக உணவு தேடி குப்பைக்கூளங்களைக் கிண்டும். அத்துடன் பண்ணையாரும் நிறைய தானியங்களை அவற்றுக்கு தினமும் கொடுத்து வந்தார். அதனால் அவை மகிழ்ச்சியுடன் கவலை இல்லாமல் வாழ்ந்து வந்தன.
அன்றும் சேவல் குப்பையைக் கிண்டும்போது பளபளவென்ற ஒரு பொருள் வெளியே வந்து விழுந்தது. அதைப் பார்த்ததும் ஓடிச் சென்று தன்னுடைய அலகினால் கொத்தித் தூக்கியது.
அது ஒரு மோதிரம். மோதிரத்தைப் பார்த்த சேவல் வாத்திடம் அதைக் காட்டி, “நம் எஜமானர் நமக்கு தானியம் போடும்போது அவருடைய கை விரலில் இந்த மோதிரத்தைப் பார்த்து இருக்கிறேன்.
“அவர் இதைத் தவறவிட்டுவிட்டார் போல இருக்கிறது. அதனால் இதை அவரிடம் கொடுக்கவேண்டும்,” என்று கூறியது.
அதற்கு வாத்து, “இதை யாரிடமாவது கொடுத்தால் நிறைய தானியங்கள் கொடுப்பார்கள். நாம் நிம்மதியாக உண்ணலாம்,” என்று கூறியது.
அதற்கு சேவல், “உன்னைப்போல என்னைப்போல இருக்கும் விலங்குகளுக்கு இந்த தங்க மோதிரத்தினால் என்ன பயன்? மற்றவர்களிடம் கொடுப்பதற்குப் பதில் நமக்கு எப்போதும் உணவு அளிக்கும் பண்ணையாரிடமே கொடுக்கலாம்,” என்று நேர்மையாக பதிலளித்தது.
தொடர்புடைய செய்திகள்
அதை தன்னுடைய அலகில் கொத்தி எடுத்துச் சென்று பண்ணையாரின் முன்னால் போட்டது.
ஒரு வார காலமாக அந்த மோதிரத்தைத் தேடிக்கொண்டு இருந்த பண்ணையாருக்கு காணாமல் போன மோதிரத்தைப் பார்த்ததும் எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது.
அவர் மகிழ்ச்சியுடன் கூக்குரலிட்டு தன்னுடைய பண்ணை ஆள்களை அழைத்து, சேவலின் செயலைக் கூறி பாராட்டினார். அனைவரும் கைதட்டி சேவலுக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
பண்ணையார் அதற்கு நிறைய தானியங்களை உணவாக அளித்தார். சேவல் தன்னுடைய நண்பனான வாத்தையும் அழைத்து ஒன்றாக உண்டு மகிழ்ந்தது.
ஹர்னிதா, தொடக்கநிலை 6, கொங்ஷாங் தொடக்கப்பள்ளி

