அனுஷா செல்வமணி
பெற்றோர் வித்திட்ட தொண்டூழியப் பண்பு 13 வயதாகும் சீன சிறுமி சிங் ரூய் ஜீக்கு ஆழமாக வேரூன்றி நிற்கிறது.
இந்தாண்டின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிறந்த சிங்கப்பூரர் விருதுக்கு முன்மொழியப்பட்டு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றவர்களில் ஒருவரான ரூய் ஜீ, இந்த விருதுக்கு முன்மொழியப்பட்டவர்களில் ஆக இளையவர்.
தன்னால் இயன்ற வரை பிறருக்கு உதவ வேண்டும் என்பது ரூய் ஜீயின் வேட்கை. “நீங்கள் உதவ நினைத்தால், உடனே அதில் இறங்குங்கள்,” என்கிறார் ரூய் ஜீ.
ஒன்பது வயதிலேயே ரூய் ஜீ சுயமாக தனது முதல் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.
விலங்குவதை தடுப்புச் சங்கம், அசிசி அந்திமகால பராமரிப்பு நிலையம் ஆகியவற்றுக்கு அவர் இணையம் வழி 60 நிதி திரட்டும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இன்று இவரின் அறப்பணி $1.2 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளது.
சமுதாயத்திற்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றிய நபர்களுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த விருதை வழங்கி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
குடும்பத்தில் ஒரே பிள்ளையான ரூய் ஜீ தனக்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லை என்பதால் இவர் உதவி நாடும் பிள்ளைகளுக்கு மூத்த சகோதரியாக இருக்க விரும்புவதாக சொன்னார்.
தனது அறப்பணி காரணமாக பல முறை செய்திகளில் இவர் இடம் பெற்றிருந்தாலும் தன்னடக்கமாக இருக்கிறார் ரூய் ஜீ.
“பள்ளியில் நான் எனது நண்பர்களிடம் எனது தொண்டூழியப் பயணத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ள மாட்டேன். என் ஆசிரியர் வகுப்பில் என்னைப் பற்றியும் நான் செய்யும் தொண்டூழியம் பற்றி பேசினாலும் நான் வெட்கத்தில் தலை குனிந்து விடுவேன்.”
எவ்வளவு நிதி திரட்டியிருக்கிறேன் என்பதைவிட மக்களுக்கு உதவுவதால் கிடைக்கும் மகிழ்ச்சிதான் தனக்கு மன நிம்மதியை அளிப்பதாக ரூய் ஜீ கூறினார்.
கொவிட்-19 காலத்தில் அதிகளவில் தொண்டூழியத்தில் இறங்கிய ரூய் ஜீக்கு அப்போது வயது ஒன்பதுதான்.
பொங்கோல் மற்றும் பாசிர் ரிஸ் வட்டாரத்தில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு தன் கைப்பட உதவிப் பொட்டலங்களை விநியோகிப்பதிலும் இவர் ஈடுபடுகிறார்.
பள்ளி அனுமதித்தால் மாதத்திற்கு ஒரு முறை ரூய் ஜீ தொண்டூழியத்தில் ஈடுபட விரும்புகிறார்.
இணையத்தில் நிதி திரட்டுவதற்கு அப்பாற்பட்டு நேரடியாகச் சென்று உதவி தேவைப்படுவோருக்கு தனது உதவிக்கரத்தை நீட்ட விரும்புகிறார் ரூய் ஜீ.
“என்னைப் பார்த்து என் வயதில் இருக்கும் இளையர்களும் தொண்டூழியத்தில் ஈடுபட ஊக்கம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.
“அவர்களுக்கு நான் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்,” என்று தெரிவித்தார்.
விருது இவருக்கு கிடைக்காமல் போனாலும் ரூய் ஜீக்கு $5,000, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணச்சீட்டும் விடுதியில் தங்க இலவச அனுமதியும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
sanush@sph.com.sg

