சோம்பித் திரிவர் தேம்பித் திரிவர்

சோம்பித் திரிவர் தேம்பித் திரிவர்

2 mins read
சோம்பல் கூடாது
d01d8c4e-617e-494f-855e-b1c542193109
மருத்துவமனை அருகே ரகுவும் பாலுவும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். - படம்: ஊடகம்

ரகுவும் பாலுவும் தொடக்கநிலை நான்கில் படிக்கிறார்கள். அவர்களில் ரகு மிகவும் சுறுசுறுப்பான மாணவன். ஆசிரியர் கொடுக்கும் பாடங்களை அன்றன்று செய்து முடித்து மறுநாள் அவற்றை ஆசிரியரிடம் ஒப்படைத்துவிடுவான்.

ஆனால் பாலுவோ மிகவும் சோம்பேறி. பள்ளி எப்போது முடியும்? வீட்டிற்கு சென்று தூங்கலாம் என்று காத்திருப்பான். பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்று பள்ளிப் பையை ஒரு மூலையில் போட்டுவிட்டு மெத்தையில் படுத்துவிடுவான்.

மறுநாள் பள்ளிக்கு வீட்டுப் பாடங்களைச் செய்யாமல் வருவான். ஆசிரியர் அவனைக் கடிந்துகொள்வார். தினமும் இவ்வாறு ஆசிரியரிடம் வசவு வாங்குவதை எண்ணி அழுதுகொண்டே ரகுவிடம் தன்னுடைய சோம்பேறித்தனத்தைப் பற்றி கூறி வருந்துவான்.

ரகுவின் தந்தை ஒரு மருத்துவர். ஒருநாள் ரகு அவன் தந்தையிடம் சென்று பாலுவின் சோம்பேறித்தனத்தைப் பற்றி கூறினான். அவரும், “அவனை ஒருநாள் என்னிடம் அழைத்து வா. அவனுக்கு நல்ல மருந்து கொடுக்கிறேன்,” என்று கூறியிருந்தார்.

மறுநாள் ரகு பாலுவிடம் என் தந்தை நல்ல மருந்து கொடுப்பார். வந்து அவரைப் பார்,” என்று கூறி தந்தையிடம் அழைத்துச் சென்றான்.

ரகுவின் தந்தையும் பாலுவை பரிசோதித்துவிட்டு, “நான் கொடுக்கும் இந்த மருந்தை உனக்கு எப்போது எல்லாம் வியர்க்கிறதோ அப்போது எல்லாம் சாப்பிடு. அப்படி சாப்பிட்டால் உன்னுடைய சோம்பல் என்ற வியாதி உன்னை விட்டுச் செல்லும்,” என்று கூறி, மருந்தைக் கொடுத்தார்.

பாலு ‘வியர்த்தால் மட்டுமே மருந்து சாப்பிட முடியும்? ஆனால் வியர்க்கவில்லையே,’ என்று கவலைப்பட்டான். சரி, நாம் ஏதாவது வேலை செய்தால் வியர்க்கிறதா என்று பார்க்கலாம் என்று வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கினான், அப்போது அதிகம் வியர்த்தது. உடனே அந்த மருந்தை எடுத்து உண்டான்.

அதுபோல் தொடர்ந்து வீட்டு வேலைகளையும் அவன் பள்ளி வேலைகளையும் தொடர்ந்து செய்யத் தொடங்கினான். வியர்க்க வியர்க்க அவன் மகிழ்ந்துபோனான்.

சில நாள்களிலேயே அவன் சுறுசுறுப்பாக மாறினான். பள்ளிப் பாடங்களை படித்து தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றான். ஆசிரியர் அவனைப் பாராட்டத் தொடங்கினார்.

அவன் இதற்கெல்லாம் காரணம் ரகுவின் தந்தை கொடுத்த மருந்துதான் என்று எண்ணி அவரிடம் நன்றி கூறச் சென்றான்.

ரகுவின் தந்தை சிரித்துக்கொண்டே, “பாலு, உன்னுடைய சோம்பேறித்தனத்தை மாற்றவே நான் சத்து மாத்திரைகளைக் கொடுத்தேன். நீயும் வியர்க்கவேண்டும் என்று எண்ணி தொடர்ந்து வேலை செய்யத் தொடங்கினாய். இப்போது உன் உடல் அதற்கு பழகிவிட்டது. அதனால் நீ சுறுசுறுப்பாக படிப்பதுடன் வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கி விட்டாய். இனி அந்த மாத்திரை உனக்குத் தேவைப்படாது,” என்று கூறி பாலுவை அனுப்பி வைத்தார்.

பாலுவும் மகிழ்ச்சியுடன் ரகுவிற்கும் அவருடைய தந்தைக்கும் நன்றி கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்தான்.

சோம்பேறி முட்களற்ற கடிகாரம் போன்றவன். கடிகாரத்தில் பெரிய முள், சிறிய முள் இல்லையென்றால் கடிகாரம் எதற்கும் உதவாது. அதுபோல சோம்பேறியாக இருந்தால் எதற்கும் உதவ மாட்டார்கள்.

குறிப்புச் சொற்கள்