சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை மாற்றம், பல்லுயிர் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 23 அன்று நடைபெற்றது.
சிங்கப்பூரில் உலக வனவுயிர் நிதி (World Wildlife Fund) அமைப்பின் சார்பில், ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ எனும் கருப்பொருளில், ‘விஸ்மா ஏற்றியா’ கடைத்தொகுதியில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பல்வேறு கலை நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக சுற்றியுள்ள பகுதிகளில் தேவை இல்லாத மின் விளக்குகள் ஒரு மணி நேரம் அணைக்கப்பட்டன. இதனால் ஏற்படும் நேர்மறை விளைவுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மாணவர்கள், சுற்றுச்சூழல் அமைப்பு குறித்தும் பவளப்பாறை, ஆமை உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கப்படங்கள் கொண்ட பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
வண்ணம் தீட்டும் சாவடி, குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் வனவிலங்கு, சுறாமீன்கள், சிப்பிகள், கடல்வாழ் உயிரினங்கள் குறித்த தகவல்களை விளக்கிச் சொல்லும் சாவடிகளில் சிறுவர்களும் பெற்றோரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
ஹென்ரி பார்க் தொடக்கப்பள்ளியில், தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயிலும் க்ருத்திக் ஆனந்த், 12 தன் பள்ளியின் சார்பில், குழுவாக இணைந்து வேதிப் பொருள்களற்ற சுத்தம் செய்யும் திரவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அவர், “நாம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ‘பிளாஸ்டிக்குகளை’ உபயோகிப்பது, அதிக வேதிப்பொருள்கள் கலந்த திரவங்கள் கொண்டு சுத்தம் செய்வது என சுற்றுப்புறத்துக்கு கேடு விளைவிக்கும் பலவற்றை செய்கிறோம். அவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என சொல்வதற்கு வந்துள்ளோம்,” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட ரிவான் பயானி, 9, “நாம் வாழும் இதே பூமியில்தான் விலங்குகள், பறவைகள் வாழவேண்டும். அதை நாம் அழிப்பது தவறு என புரிந்துகொண்டேன். இதனை என் நண்பர்கள் அனைவரிடமும் சொல்வேன்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
ஹென்ரி பார்க் தொடக்கப்பள்ளி அறிவியல் ஆசிரியை ஹஸ்லினா ஹபீப் ஹாசன், “எங்கள் மாணவர்கள் தயாரித்துள்ள வேதிப் பொருள்களற்ற சுத்தம் செய்யும் திரவம் விநியோகிப்பதும், பார்வையிடும் சிறுவர்களுக்கு நீடித்த நினைத்தன்மை குறித்து விளக்குவதும் மகிழ்வளிக்கிறது” என்றார்.
“நாம் வாழும் இதே பூமியில்தான் விலங்குகள், பறவைகள் வாழவேண்டும். அவற்றுக்கும் இதுதான் வீடு. அதை நாம் அழிப்பது தவறு என புரிந்துகொண்டேன். இதனை என் நண்பர்கள் அனைவரிடமும் சொல்வேன்.
ரிவான் பயானி
“நாம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிகளை உபயோகிப்பது, அதிக வேதிப் பொருள்கள் கலந்த திரவங்கள் கொண்டு சுத்தம் செய்வது என சுற்றுப் புறத்துக்கு கேடு விளைவிக்கும் பலவற்றை செய்கிறோம். அவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என சொல்வதற்கு வந்துள்ளோம்.
க்ருத்திக் ஆனந்த்
தொடக்கநிலை 6, ஹென்ரி பார்க் தொடக்கப்பள்ளி.

