தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நம்பிக்கையோடு இருந்தால் வெற்றி நிச்சயம்

2 mins read
2886b101-a630-4d18-8cf8-74a7c47b62d3
இப்ராஹிமின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து நிற்கும் இளைஞர். - படம்: ஊடகம்

இப்ராஹிமின் தந்தை ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டு இருந்தார். அவரின் வருமானம் வீட்டிற்குப் போதுமானதாக இருந்தது.

இப்ராஹிமுக்கு ஒரு தம்பி இருந்தான். அவன் பெயர் இஸ்மாயில்.

இருவரும் அருகில் இருந்த பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தனர்.

ஒருநாள் சகோதரர்கள் அடுக்குமாடித் தளத்தின் கீழே விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது ‘பும்பும்’ என்று வித்தியாசமான சத்தம் கேட்டது. சத்தம் வித்தியாசமாக இருந்ததால் அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்துகொள்ள இப்ராஹிம் சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றான்.

அங்கே ஓர் அழகிய புத்தம்புது வாகனம் நின்றுகொண்டு இருந்தது. அதிலிருந்து புத்தம் புதிய உடையை அணிந்து ஒரு வாலிபன் இறங்கினான்.

அவன் வண்டியின் அருகே நின்றுகொண்டு யாருக்காகவோ காத்திருந்தான்.

அப்போது இப்ராஹிம் அந்த வாகனத்தின் அழகை வியப்புடன் பார்த்துக்கொண்டு நின்றான்.

அவனைப் பார்த்த அந்த வாலிபன், “இந்த வாகனம் அழகாக இருக்கிறதா? என் அண்ணன் என்னுடைய பிறந்தநாளுக்கு இந்த வாகனத்தைப் பரிசாக அளித்தார்,” என்றான்.

“உனக்கும் என்னுடைய அண்ணன் போல ஓர் அண்ணன் இருந்தால் உனக்கும் இதுபோன்ற பரிசு கிடைக்கும் என்று நினைக்கிறாய் அல்லவா?” என்று கேட்டான்.

அதற்கு இப்ராஹிம் சிரித்துக்கொண்டே, “இல்லை... இல்லை... அப்படியோர் அண்ணனாக நான் வளரவேண்டும் என்று விரும்புகிறேன். நான் நன்கு படித்து நல்ல வேலையில் சேர்ந்து என் தம்பிக்கு இதுபோன்று விலையுயர்ந்த பரிசு வாங்கிக் கொடுக்கவேண்டும்,” என்று நினைத்தேன் என்றான்.

அதைக் கேட்ட அந்த வாலிபன் வெட்கித் தலைகுனிந்தான்.

எப்போதும் எண்ணங்கள் உயர்வாக இருக்கவேண்டும். எண்ணங்களுக்கு வலிமை உண்டு. அதனால்தான், ‘எண்ணம் போல் வாழ்வு’ என்றும் ‘எதை நினைக்கிறோமோ அதுவாக ஆகிறாய்’ என்பதும் வலிமை வாய்ந்த வார்த்தைகளாக கூறப்பட்டு வருகிறது.

“நீ உன்னை வலிமை வாய்ந்தவன் என்று எண்ணினால் வலிமை படைத்தவனாகவே ஆகிறாய்” என்றார் விவேகானந்தர்.

உன்னுள் நல்ல செயல் இருந்தால் உனக்குள் நம்பிக்கை பிறக்கும். நம்பிக்கையோடு நீ நடந்தால் வெற்றி நிச்சயமாகும்.

குறிப்புச் சொற்கள்