தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புரிந்துகொள்ளாதவருடன் பேசினால் வேதனையே மிஞ்சும்

2 mins read
e0fb0224-aac9-4d44-989f-a53c0e7bae42
குருவியின் கூட்டை பிய்த்தெறியும் குரங்கு. - படம்: ஊடகம்

ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அதில் குருவி ஒன்று கூடு கட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.

ஒருநாள் கனத்த மழை பெய்தது. குளிர் கடுமையாக வாட்டியது.

அப்போது அம்மரத்திற்கு குரங்கு ஒன்று வந்தது. குரங்கு, குளிரால் நடுங்கியது.

குளிரில் நடுங்கும் குரங்கைப் பார்த்த குருவி அதன் மேல் இரக்கம் கொண்டது.

உடனே குரங்கிடம், “உனக்கு கை கால்கள் இருந்தும் இப்படி குளிர், மழை, வெயில் போன்றவற்றினால் ஏன் க‌‌ஷ்டப்படுகிறாய்? நீ ஏன் உனக்கு ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளக் கூடாது?” என்று பரிவுடன் கேட்டது.

ஆனால், அதனைக் கேட்ட குரங்கு “இத்தனைச் சிறிய உருவம் கொண்ட நீ எனக்கே புத்தி சொல்கிறாயா? எனக்கு வீடு கட்டிக்கொள்ளும் சக்தி கிடையாது. ஆனால் பிரித்து எரிகிற ஆற்றல் உண்டு,” என்று கூறி குருவியின் கூட்டைப் பிரித்து, பிய்த்து எரிந்தது.

வீட்டை இழந்த குருவி மூடனுக்கு அறிவுரை சொன்னதால் வந்த வினையை எண்ணி வருந்தியது.

சிறுவர்களே! அறிவில்லாதவர்களுக்கு அறிவுரை கூறினால் நமக்கு கெடுதலே நிகழும் என்பதை இக்கதையில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

இதைத்தான் ஔவை பாட்டி, ‘பாம்பொடு பழகேல்’ என்று ஆத்திச்சூடியில் சொல்லியிருக்கிறார். பாம்பானது பால் கொடுத்தவருக்கும் நஞ்சைக் கொடுக்கின்ற தன்மையினை உடையது.

தமக்கு நன்மையையே ஒருவர் செய்தாலும் அதைக் கருதி நன்றி பாராட்டாமல் தீமையையே செய்பவர்கள் பாம்பினைப் போன்றவர்கள். அத்தகையவர்களோடு பழக்கத்தைக் கொள்ளாதே என்பதை உணர்த்தும்பொருட்டு ‘பாம்பொடு பழகேல்’ என்று ஔவையார் கூறியிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்