லாவண்யா வீரராகவன்
சங்க இலக்கியங்கள், அவை கூறும் வாழ்வியல் கருத்துக்கள் குறித்த உரைகளுடன் களைகட்டியது ‘இலக்கிய சங்கமம் 2024’ நிகழ்ச்சி.
தமிழ் மொழி மாதத்தின் ஒரு பகுதியாக, தேசிய நூலகத்தில், கடந்த மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சி, தமிழ் வாழ்த்துப் பாடல், மாணவி பூஜாஸ்ரீ சுப்பிரமணியனின் பரத நாட்டியம் என கலை அம்சங்களுடன் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர், உலகத் தமிழ் மாமணி இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியையொட்டி, பாலர் பள்ளி மாணவர்களுக்கான மாறுவேடப் போட்டி, தொடக்க நிலை மாணவர்களுக்கான, கொன்றை வேந்தன், நல்வழி, இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை முன்னரே நடைபெற்றிருந்தன. அவற்றிலும், உயர்நிலை மாணவர்கள், பெரியவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பாலர் பள்ளி சிறுவர்கள் தொடங்கி, முதல் பரிசு பெற்ற அனைத்து மாணவர்களும் அவர்கள் படித்தவற்றை அழகு தமிழில் மேடையில் அரங்கேற்றியது, பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது.
பாரதிதாசன் வேடமிட்டு முதல் பரிசு வென்ற பாலர் பள்ளி மாணவர் க்ருதிக், மழலைக் குரலில் பேசியது, பங்கேற்பாளர்களைக் கவர்ந்தது. அனைவரும் விரும்பிக் கேட்கவே, இரண்டாம் முறை அவர் மேடை ஏறி பேசியது குறிப்பிடத்தக்கது.
அம்மா அப்பா சொல்லிக்கொடுத்த வசனங்களைப் பேசியதும், அனைவரும் கைதட்டிப் பாராட்டியது, பரிசு வாங்கியது அனைத்தும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார் மாணவர் க்ருதிக்.
தொடர்புடைய செய்திகள்
கொன்றை வேந்தன் ஒப்புவித்து மோகன்ராஜ் சுதீக்ஷா, நல்வழி ஒப்புவித்து நஜீரா கார்த்திக், இன்னா நாற்பது ஒப்புவித்த தீபேஷ்.இ, சிறுபஞ்சமூலம் ஒப்புவித்த தியா.பொன்ராஜ் என அனைவருமே, பாடல்களோடு அதன் பொருளையும் பகிர்ந்தது, அனைவராலும் பாராட்டப்பட்டது.
பாடல்களையும் அதன் விளக்கத்தையும் அழகிய முக பாவனைகளோடு சொல்லிய தியா.பொன்ராஜ், அரங்கை ரசிக்க வைத்தார். அவர், “கடந்த முறை திருக்குறள் போட்டியில் பங்கேற்றது புதுமையான அனுபவமாக இருந்தது. இந்த முறையும் பங்கேற்க ஆவல் ஏற்பட்டது. பல போட்டிகளில் பங்கேற்றுள்ளதால் பெருங்கூட்டத்தின் முன் பேசுவதற்கு பயம் இல்லை என்றார். எதிர்காலத்தில் நன்கு தமிழ் படித்து, ஆசிரியையாக வரவேண்டும் எனவும் விரும்புகிறார்.
உயர்நிலைப் பிரிவுகளில் முதல் பரிசு பெற்ற அர்ச்சனா பழனியப்பன், ராதிகஸ்ரீ தமிழ்ச்செல்வன் ஆகியோரும் மேடையேறி பேசி பாராட்டுகளைக் குவித்தனர்.
தமிழின் இனிமை குறித்து பேசிய அர்ச்சனா பழனியப்பன், ஏறத்தாழ ஒரு வார காலம் இதற்காகப் பயிற்சி எடுத்ததாகச் சொன்னார். இன்னும் பல போட்டிகளில் பங்கேற்று பரிசு பெறுவேன் என நம்பிக்கையோடு சொன்னார்.

