சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற சிலம்பம் பயிலரங்கு

2 mins read
a4b695d7-68fd-44ad-aafd-75b5f4e14ab2
சிலம்பம் கற்றுக்கொள்ளும் சிறுவர்கள். - படம்: களரி அகாடமி 

வீரம் தமிழர்களின் வாழ்வியலோடு கலந்தது. அதற்கு ஓர் அடையாளமாகத் திகழும் ‘சிலம்பம்’ தற்காப்புக் கலையை கற்றுத்தரும் பயிலரங்கு கடந்த மார்ச் 31ஆம் தேதி, சிராங்கூனில் உள்ள களரி அகாடமி பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது.

தமிழ்மொழி விழா 2024ன் ஒரு பகுதியாக இப்பயிலரங்கு நடைபெற்றது. சிலம்பக் கலையின் அடிப்படை அசைவுகளான, ‘வெட்டு’ ‘வாரல்’ ஆகியவை சொல்லித்தரப்பட்டன.

அவற்றைக் கொண்டு கட்டமைக்கப்படும் நான்கு வகை முக்கியத் தொடர் வரிசைகளும் பயிற்றுவிக்கப்பட்டன.

சிலம்பக் கலை வரலாறு, போர்ச் சிலம்பம், அலங்காரச் சிலம்பம் ஆகிய வகைகள், அவற்றின் வேறுபாடுகள் என பல தகவல்கள் பகிரப்பட்டன.

தவிர, நான்கு திசைகளிலும் செய்யப்படும் ‘வெறுங்கை தற்காப்பு’ எனும் அடிப்படை தற்காப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

‘களரி அகாடமி’ குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிலரங்கை, தமிழாசிரியரும் சிலம்பம் ஆசானுமான திருவாட்டி. பொன்மொழி வழிநடத்தினார். கற்றவற்றைப் பயிற்சி செய்ய பிற பயிற்சியாளர்கள் உதவினர்.

இதில் கலந்து கொண்ட ஆறு வயதான தனன்யா, என் அம்மா சிலம்பம் பற்றி சொன்னார். நீளமான கம்பைக் கொண்டு சுற்றுவது தொடக்கத்தில் பயமாக இருந்தது. கற்றபின் மிகவும் எளிமையாக கம்பு சுற்ற வருகிறது,” என்றார்.

இவரது சகோதரர் ஹரிஷ், 11, தனக்கு சிலம்பம் கற்றுக்கொள்வது மகிச்சியைத் தருவதாகச் சொன்னார்.

இவர்கள் இருவருடன் இவர்களது அன்னை திருவாட்டி கீதாவும் பங்கேற்றார். நாங்கள் இணைந்து பயில்வது எங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் என்றார்.

இதேபோல மற்றொரு தாய்-மகன்-மகள் மூவரும் இப்பயிலரங்கிற்கு வந்திருந்தனர்.

எட்டு வயதான ரிபவ் கபிலன், பதிமூன்று வயதான தி‌‌‌ஷா கபிலன் ஆகியோர் இப்பயிலரங்கில் ஆர்வத்துடன் பங்கேற்று பயின்றனர்.

மின்னிலக்கக் கருவிகளிடமிருந்து திசைதிருப்பி, உடற்பயிற்சி மேற்கொள்ளச் செய்ய இது நல்வாய்ப்பு எனவும், இவ்வாறு சேர்ந்து பயில்வது, மூவருக்கிடையில் ஒரு நெருக்கத்தை உருவாக்கும் எனவும் சொன்னார் இவர்களது தயார் திருவாட்டி சிந்துஜா குமரன்.

இதனை வழிநடத்திய ஆசிரியை, ஆசான் பொன்மொழி, இப்பயிலரங்கு அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

மொழியில் புலமை பெற முதற்படியாக, எழுத்துக்களைக் கற்பதுபோல, சிலம்பத்தில் தேர்ச்சி பெறத் தேவையான அடிப்படை அசைவுகள் இப்பயிலரங்கில் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன எனச் சொன்னார் ‘களரி அகாடமியின்’ தோற்றுநர் ஆசான் வேதகிரி கோவிந்தசாமி, 44. இதனை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பல வரிசைகளைத் தொடர்ந்து பயிற்சி செய்தால், சிலம்பக் கலை வல்லுநராகலாம் என்றார் இவர்.

குறிப்புச் சொற்கள்