செல்வந்தராகியும் உழைப்பை கைவிடாத ராக்ஃபெல்லர்

செல்வந்தராகியும் உழைப்பை கைவிடாத ராக்ஃபெல்லர்

2 mins read
39fc34de-c88a-4223-955d-ec3344d5b3bb
ராக்ஃபெல்லர். - படம்: ஊடகம்

செல்வந்தராகியும் வயதானபின்பும் உழைப்பை கைவிடாத ராக்ஃபெல்லர்.

அமெரிக்க தொழிலதிபர் ராக்ஃபெல்லர். இவர் இளமை முதல் முதுமை வரை கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார்.

விமானத்தில் பயணம் செய்யும்போதும் மற்றவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தனர். ஆனால் ராக்ஃபெல்லர் ஓய்வு எடுக்காமல் கணினியில் வேலை செய்து கொண்டு இருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த இளைஞனுக்கு அவர் பெரிய தொழில் அதிபர் என்பது தெரியும்.

அந்த இளைஞன், “ஐயா இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள். நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே!” என்று ராக்ஃபெல்லரிடம் சொன்னான்.

உடனே ராக்ஃபெல்லர், “நாம் பயணம் செய்யும் விமானத்தை விமானி நல்ல உயரத்தில் பறக்க வைத்து இருக்கிறார். விமானமும் தற்பொழுது ஆடாமல் அசையாமல் நிதானமாக பறந்துகொண்டு இருக்கிறது.

“இப்போது அதன் இயந்திரத்தின் செயல்பாட்டை விமானி நிறுத்தி விடமுடியுமா? இயந்திரத்தை அணைத்துவிட்டால் என்னவாகும்?” என்று கேட்டார்.

பதற்றத்துடன் “பெரும் விபத்து நேரும்,” என்றான் அந்த இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், “வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, ‘உயரத்தைத் தொட்டு விட்டோம்’ என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும்.

“உழைப்பு என்பது வருமானத்திற்காக மட்டுமல்ல; உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!” என்று விளக்கம் அளித்தார்.

அவருடைய விளக்கத்தைக் கேட்ட அந்த இளைஞன் வாயடைத்துப் போய் நின்றான்.

நீதி: கடினமான உழைப்பு இல்லாமல் நம்மால் எதையும் எளிதில் சாதிக்க முடியாது.

குறிப்புச் சொற்கள்