குறளோடு கோலாட்டம்

குறளோடு கோலாட்டம்

2 mins read
725489f0-bfd0-47aa-84fc-b12f9154bfb8
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள். - படம்: வாங்கோ ஸ்டியோஸ்

பல்வேறு அறம் சார்ந்த கருத்துகளை வலியுறுத்தும் தமிழ் மறையான திருக்குறளை சிறுவர்களுக்கும் புரியும் வண்ணம் கோலாட்டக் கலையோடு இணைத்து சொல்லிக் கொடுத்த ‘குறளோடு கோலாட்டம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் மொழி விழாவின் ஒரு பகுதியாக, கலையோடு கல்வி எனும் கருப்பொருளில் அமைந்த இந்நிகழ்ச்சி கடந்த வாரம் சனிக்கிழமை ஆயர் ராஜா சமூக மன்றத்தில் நடைபெற்றது.

அடிப்படை வாழ்வியல் கருத்துகளைக் கூறும் 15 திருக்குறள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றின் விளக்கம் எடுத்துக்காட்டுகளோடு சொல்லிக் கொடுக்கப்பட்டது.

திருக்குறளைச் சொல்ல வைத்து, அதற்கேற்ற பறை இசை, அதன் தாளத்துக்கேற்ற கோலாட்ட நடனமும் கற்பிக்கப்பட்டது.

இதில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர் என ஏறத்தாழ 90க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியை ‘மணிமாறன் கிரியேஷன்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த கலைஞர்கள் பார்த்திபன், அரவிந்த் இருவரும் வழிநடத்தினர். தமிழாசிரியர் திருவாட்டி மலர் திருக்குறள் கருத்துகளைப் பங்கேற்பாளர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கமளித்தார்.

இதில் கலந்துகொண்ட பெய் தொங் தொடக்கப்பள்ளி மாணவி கிஷோர் குமார் லோஷினி,12, முதன்முறையாக கோலாட்டம் ஆடியது நன்றாக இருந்தது எனவும் சில புதிய திருக்குறள்களைக் கற்றுக்கொண்டதாகவும் சொன்னார். 

ஈசூன் உயர்நிலைப்பள்ளி மாணவர் ரோஹான், கிருத்தீஷ் ஆகியோர், பலருடன் இணைந்து கோலாட்டம் ஆடியது புதுமையான அனுபவமாக இருந்தது என்றனர். அன்றைய தினம் மகிழ்ச்சியாக சென்றதாக அவர்கள் கூறினர்.

சிராங்கூன் பகுதியிலிருந்து பெற்றோர் குமரேஷ், வைஷாலியுடன் நிகழ்ச்சிக்கு வந்த மஹரிதா ஸ்ரீ, அங்கு பல புதிய நபர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி என்றார். 

கலையார்வத்துடன் சேர்த்து, மொழியார்வத்தைத் தூண்ட தங்களால் இயன்ற வகையில், தமிழ் மொழி விழாவில் பங்களிப்பது தங்களுக்குப் பெருமை என்றனர் மணிமாறன் கிரியேஷன்ஸ்  குழுவினர். 

குறிப்புச் சொற்கள்