புத்தாக்கமும் கலாசாரமும்

2 mins read
b03e2180-6438-4416-af36-d25193642dbd
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள். - படம்:

எங்கும் எதிலும் செயற்கை நுண்ணறிவு என்றாகிவிட்ட நிலையில், செந்தமிழ் உலகிலும் அதன் பயனை நீட்டிக்கும் விதமாக ‘செந்தமிழ் உலகில் செயற்கை நுண்ணறிவு’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தமிழ்மொழி விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் முதல் பகுதியாக, ஒளி, ஒலி, கலை உருவாக்கத்துக்குச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்த கற்றுத்தரும் பயிலரங்கு நடத்தப்பட்டது. 

இப்பயிலரங்கில் உயர்நிலை ஒன்று இரண்டாம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் கற்றுக்கொண்ட கருவிகளைப் பயன்படுத்தி தமிழ் சார்ந்த தலைப்புகளில் கலைப் படைப்புகளை மாணவர்கள் உருவாக்கினர்.

நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியாக, மாணவர்கள் தங்கள் படைப்புகளை நடுவர்கள் முன் படைத்தனர். அதில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்பயிலரங்கிலும் தொடர்ந்து நடைபெற்ற போட்டியிலும் எட்டு மாணவர் குழுக்களும் ஏழு மாணவர்கள் தனியாகவும் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். 

ஒவ்வொரு படைப்பும் அடோப்பின் ‘ஸ்கெட்ச்’சைப் பயன்படுத்தி செய்யப்பட்ட முப்பரிமாண காட்சிப் படங்கள், அதனை ஒட்டிய மின்நூல், அவர்களது முழுக் கற்றல் பயணத்தையும் முன்வைக்கும் ‘பிரசன்டேஷன்’ ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதாக அமைந்தது.

அந்தப் புத்தாக்கச் செயலிகள், இணையத்தளப் பயன்பாடுகளை ஒரு பயிலரங்கு மூலம் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குணசேகரன். மாணவர்கள் சாட் ஜிபிடி, ஜெமினி ஆகிய அண்மைய செயற்கை நுண்ணறிவுத் தளங்களையும் பயன்படுத்தினர்.

தொழில்நுட்பம்தான் எதிர்காலம். அதனை உரிய வகையில் பயன்படுத்தி, அதன் மூலம் மொழி, பண்பாட்டை வளர்ப்பது சிறந்த வழி என தாம் நம்புவதாகச் சொல்கிறார் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையில் பயணிக்கும் திரு குணசேகரன்.  

ஒரு கோவிலின் முப்பரிமாண காணொளியையும் அதையொட்டிய கலாசாரக் கூறுகளையும் படைத்த மாணவர்கள் ஜான் ஹித்தேஷ், ஹன்சிகா, ஆக்ஷத், ரயான் ஆகியோர், இப்போட்டிக்கான தயாரிப்புகள், கணினி விளையாட்டு போன்றவை உற்சாகம் அளித்ததாகக் கூறினர். சவால்களைக் குழுவாக கலந்துரையாடி எதிர்கொண்டது நல்ல அனுபவம் என்றனர். 

கேலாங் மெத்தடிஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் யோகேஷ், ஜோஷ்வா ஆகியோர் சிங்கப்பூரின் கட்டடக் கலை, சுற்றுப்புறம், வரலாறு ஆகியவற்றைக் முப்பரிமாண முறையில் கண்முன் நிறுத்தி பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றனர்.

புத்தகம் படிப்பதிலும் கதை எழுதுவதிலும் ஆர்வம் மிக்க மாணவிகள் ஷிவானி சூர்யநாராயணன், சாய் லட்சுமி ஆகியோர், இப்போட்டியில் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியது பெருமையாக இருந்தது என்றனர். இதுபோன்ற புத்தாக்கத் திட்டங்களில் பங்கேற்க ஊக்குவிப்பதாக அவர்கள் கூறினர்.

மாணவர்கள் எடுத்துக்கொண்ட தலைப்புகளும் அவர்களது படைப்புகளும் காண்போரை வியக்கச் செய்தன. 

எதிர்கால தொழில்நுட்பம், நம் வேர்களை ஆராயவும் அறியவும் மேம்படுத்துவது காண்பதற்கு நிறைவாக இருக்கிறது என்றார் இப்போட்டிக்கு நடுவராக வந்த, தமிழ்ப் புத்தாக்கத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் திரு சஞ்சய்.

குறிப்புச் சொற்கள்