தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் திருக்குறள் சாதனை

2 mins read
b0ed46db-ce79-48ab-b7db-5864d81f8705
133 அதிகாரங்கள், 133 படைப்பாளர்கள், 133 நிமிடங்களில் திருக்குறள்களை காணொளிகளாக படைத்து சாதனை. - படங்கள்: யோகிதா அன்புச்செழியன்
multi-img1 of 6

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் நடத்திய திருக்குறள் சாதனை நிகழ்வு சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் (Singapore Book of Records) இடம் பெற்றுள்ளது.

சிங்கையில் சிறப்பாக நடத்தப்பட்டு வரும் தமிழ்மொழி மாதத்தின் ஓர் அங்கமாக இந்த நிகழ்வு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஏப்ரல் 28ஆம் தேதி, 2024, ஞாயிற்றுக்கிழமை காலையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

திருக்குறளின் 133 அதிகாரங்களையும் கதை, கவிதை, பாடல் அல்லது ஆடலாக 133 படைப்பாளர்கள் மொத்தம் 133 நிமிடங்களுக்குள் காணொளியாகப் படைத்து சாதனைப் படைத்துள்ளனர்.

திட்டமிட்டபடி, ஒவ்வொரு படைப்பாளரும் தங்கள் படைப்புகளை ஒரு நிமிடத்திற்குள்ளாக படைத்தனர். அனைத்துப் படைப்புகளும் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு தமிழ்மொழி பண்பாட்டுக் கழக முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

திருக்குறளை எளிமையாகவும் புதுமையாகவும் பொதுத்தளத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவும் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள், பெற்றோர், இளையோர், முதியோர் மற்றும் சிங்கப்பூர் தமிழ்ப் பேச்சாளர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆற்றலையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர்.

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தின் (Singapore Book of Records) நிறுவனத் தலைவர் திரு எங் ஹுவாட் ஓங் இந்தச் சாதனையை அங்கீகரித்து சாதனைக்கான சான்றிதழை தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு ஹரிகிருஷ்ணன் முத்துச்சாமியிடம் வழங்கினார்.

சாதனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்களை தமிழ்மொழி பண்பாட்டுக்கழகத்தின் தலைவர் திரு ஹரிகிருஷ்ணன் முத்துச்சாமி வழங்கினார்.

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பங்கேற்பாளர்களுக்குக் காலை மற்றும் மதிய உணவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வளர்தமிழ் இயக்கத்தின் துணைத்தலைவர் திரு. ஜோதி மாணிக்கவாசகம் சிறப்பு விருத்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

இச்சாதனை நிகழ்வை தமிழ்மொழி பண்பாட்டுக்கழக தொண்டூழியர் திரு உமா சங்கர் நாரயணன் தலைமையிலான குழு ஒருங்கிணைத்தது.

கடந்த ஆண்டு 1,330 திருக்குறள்களையும் 1,330 படைப்பாளர்கள் 1,330 பேருந்து நிலையங்களிலிருந்து எடுத்துரைத்து சாதனை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்