நீங்கள் பிறப்பதற்கு முன்பு இருந்தே சிங்கப்பூரின் பிரதமராக இருப்பவர் திரு லீ சியன் லூங். அவர் பிரதமராக 20 ஆண்டுகள் சேவை ஆற்றியுள்ளார்.
திரு லீ கணக்கில் கெட்டிக்காரர். கணினியில் வல்லவர்.
இவர் நவீன சிங்கப்பூரின் தந்தை எனக் கொண்டாடப்படும் லீ குவான் யூவின் மூத்த மகன். 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி பிறந்தார்.
நன்யாங் தொடக்கப்பள்ளி, கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி, தேசிய தொடக்கக் கல்லூரி ஆகியவற்றில் படித்தார். அவர் கல்வியில் சிறந்து விளங்கினார். அவருக்கு அதிபர் கல்விமான் உபகாரச் சம்பளமும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் கல்வி உபகாரச் சம்பளமும் கிடைத்தன.
லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணிதம் பயின்றார். அந்தப் படிப்பில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.
பிறகு கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயன்ஸ்) துறையில் படித்தார். பிறகு ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுச் சேவைத் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.
1974 முதல் 1984 வரை அவர் ராணுவத்தில் பணி புரிந்தார். திரு லீ அங்கும் திறமையோடு செயல்பட்டார். சிங்கப்பூரில் ஆக இளவயதில் பிரிகேடியர் ஜெனரல் ஆனவர் திரு லீதான்.
1984ஆம் ஆண்டு அவர் அரசியலில் அடி எடுத்து வைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிறு வயதில் இருந்தே அவர் தன் தந்தையின் திறமைகளையும் செயல்படும் விதத்தையும் அறிந்தவர். தந்தையையும் அவரோடு பணி புரிந்த மற்ற தலைவர்களையும் பார்த்து ஒரு நாட்டின் தலைவர் எப்படி செயல்பட வேண்டும் என்று அறிந்துகொண்டார். நல்ல தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டார்.
1984ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் டெக் கீ தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
நாடாளுமன்றம் என்பது நாட்டை ஆளும் மன்றம். இதில் இருப்பவர்கள் எல்லாரும் மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள்.
ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு சட்டாம்பிள்ளை இருப்பதுபோல, சிங்கப்பூரின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பாக இருப்பார்.
திரு லீ. வர்த்தக, தொழில் அமைச்சர், தற்காப்பு இரண்டாம் அமைச்சர், நிதியமைச்சர் என பல பணிகளைச் செய்துள்ளார். 14 ஆண்டுகள் துணைப் பிரதமராகப் பணியாற்றினார்.
பிறகு 2004ஆம் ஆண்டு திரு லீ பிரதமராகப் பதவி ஏற்றார். அப்போது அவருக்கு 52 வயது.
அவர் சிங்கப்பூரின் பிரதமராக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளார். அவரின் பதவிக் காலத்தில் சிங்கப்பூர் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள அனைவரும் கல்வி கற்க வேண்டும். உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை திரு லீ தீட்டினார். கல்வியில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டன. பள்ளிகள் நவீன வசதிகளைப் பெற்றன.
புதிய பள்ளிகள் கட்டப்பட்டன. பிள்ளைகளுக்கு பல வசதிகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி நிதி உருவாக்கப்பட்டது.
இந்த இருபது ஆண்டு காலத்தில் அவர் ஏராளமான பணிகளைச் செய்துள்ளார்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. எல்லாவற்றையும் அவர் சமாளித்தார். வெற்றி கண்டார்.
மே மாதம் 1ஆம் தேதியன்று, மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் இவ்வாண்டின் மே தினக் மே கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் லீ சியன் லூங் உரையாற்றினார். அதுவே பிரதமராக அவர் ஆற்றிய கடைசி முக்கிய அரசியல் உரை.
2019ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் அறநிறுவனம் பிரதமர் லீக்கு ‘உலகின் சிறந்த அரசதந்திரி’ எனும் விருதை வழங்கிச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இனி அவர் தொடர்ந்து அங் மோ கியோ குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையைத் தொடர்வார்.
“நான் அரசியலுக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். சிறப்பான நிலையில் இருக்கும் சிங்கப்பூரை எனக்குப் பிறகு பிரதமராகப் பதவி வகிக்க இருப்பவரிடம் மனநிறைவுடன் ஒப்படைக்க இருக்கிறேன். என் கடமையைச் செய்துவிட்டேன். இத்தனை ஆண்டுகளாகப் பொதுச் சேவையில் ஈடுபட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் பிரதமர் லீ சியன் லூங்.