வாழ்நாள் முழுவதும் கல்வி கற்க வைத்தவர்

3 mins read
7d42ae1c-2faa-4ce5-9501-4def7d156290
தீபாவளி நிகழ்ச்சியில் ரங்கோலி கோலம் போடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

1952ல் பிறந்த நம் பிரதமர் லீ சியன் லூங் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ எனும் திட்டத்தைத் தொடங்கி சிங்கப்பூரர்கள் வாழ்நாள் முழுவதும் தங்களை மேம்படுத்திக்கொள்ள வழிவகுத்தார். பல வயதானவர்களும் அந்தத் திட்டத்தில் அரசு கொடுத்த பணத்தை வைத்து தங்களுக்குப் பிடித்தமான சமையல், புகைப்படம் எடுப்பது, கணினி கற்பது போன்ற பல திறன்களைக் கற்று வருகின்றனர்.

உலகை உலுக்கிய பெருந்தொற்றான கொவிட்-19லிருந்து மக்கள் மீண்டு வர பல செயல்திட்டங்களைத் தீட்டி மக்களைக் காப்பாற்றினார். இவர் நாட்டுக்காக செய்த பல செயல்கள் உலக அரங்கில் சிங்கப்பூரை நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கிறது. நம் பிரதமர் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்த அருமையான தலைவர் ஆவார். ஹன்சிகா மோஹன்குமார்

சிங்கையை அதிநவீனமாக்கிய சிற்பி

பிரதமர் லீ தனது ஆட்சிக் காலத்தில் சிங்கப்பூருக்குப் பல திட்டங்களைத் தீட்டி சிங்கப்பூரின் பொருளாதாரத்தை மேம்படுத்தினார். மேலும், சிங்கையை அதிநவீனமாக்குவதிலும் உலகளாவிய நகரமாக உருவாக்குவதிலும் வெற்றி கண்டார். திரு லீ ஒரு நேர்காணலில் தாம் கல்விக்கு அளித்துள்ள பங்களிப்பைப் பற்றி திருப்தி அடைவதாகக் கூறினார்.

திரு லீயின் ஆட்சிக் காலத்தில் சிங்கப்பூரின் அடுத்த கட்ட வளர்ச்சியைச் சுற்றியே அவர் சிந்தனை சுழன்றுகொண்டிருந்தது என்றால் அது மிகையாகாது. அவர் முழு அர்ப்பணிப்புடன் தனது பணியைச் செவ்வனே மேற்கொண்டார். இப்படிச் சிங்கைக்காகப் பலவற்றைச் செய்த திரு லீயை மாணவர்களாகிய நாம் என்றென்றும் மறக்கக்கூடாது. ஜெயகுமார் ஜெனிஷா

எல்லைகளை மூடி மக்களைக் காப்பாற்றியவர்

கொவிட் பெருந்தொற்று காலத்தில் முன்கூட்டியே நீங்கள் சிங்கப்பூரின் எல்லைகளை மூடி நாட்டு மக்களைக் காப்பாற்றினீர்கள். உங்களுடைய அயராத உழைப்பினால் சிங்கப்பூர் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. சிங்கப்பூரை மக்கள் மிக மகிழ்ச்சியாக வாழக்கூடிய ஒரு நாடாக மாற்றிய உங்களுக்கு மிகவும் நன்றி.

இருமுறை கடுமையான நோய்க்கு ஆளாகிய போதிலும் நீங்கள் மனம் தளராது அதிலிருந்து மீண்டு என் போன்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறீர்கள். பல நாடுகளில் வெள்ளம் வந்து நாடே தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதைப் பார்க்கும்போது நல்ல திட்டங்களை வகுத்து நீர்நிலைகளை ஏற்படுத்திய உங்களுக்கு எங்களின் நன்றி. சயந்திரிகா சாய் அரவிந்

உங்களுடைய பாதையை நாங்கள் பின்தொடர்வோம்

பிரதமராக, சிங்கப்பூரர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் திறன்களை மேம்படுத்த ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’திட்டத்தை உருவாக்கினீர்கள். பசுமையான இடங்கள், பள்ளிகள், பலதுறை பலதுறை மருந்தகங்கள் மற்றும் சமூக வசதிகளுடன் புதிய அடுக்குமாடி வீடுகளை உருவாக்கினீர்கள்.

நீங்கள் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் நாங்கள் எங்கள் வாழ்வின் முதல் படிக்கட்டில் மிகவும் தன்னம்பிக்கையோடு காலடி எடுத்து வைக்கிறோம். நீங்கள் அமைத்துத் தந்த பாதையில் சிறப்பாகப் பயணித்துச் சிறந்த குடிமகனாகத் திகழ்வோம். உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. சுவார்நி

தமிழ்ச் சமுதாயத்திற்கு அரிய தொண்டாற்றியவர்

சிங்கப்பூரை உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக மாற்றிய பெருமை நம் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு உண்டு. கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சிங்கப்பூர் துவண்டுவிடாமல், மேம்பட்ட நாடாக மீண்டு எழச் செய்தவர். அவர் தமிழ்ச் சமுதாயத்துக்கு அரிய தொண்டு ஆற்றியவர். இன்றும் பல இன மக்கள் இணைந்து ஒன்றாக வாழும் நாடாகச் சிங்கப்பூர் விளங்க முக்கியப் பங்கை ஆற்றியுள்ளார். அவர் தந்தை லீ குவான் யூவின் பெயரை மேலும் புகழ்பெறச் செய்தவர் திரு லீ சியன் லூங். மனோகரன் ஹர்ஷினி தொடக்கநிலை 6, செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி

குறிப்புச் சொற்கள்