‘மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் திறவுகோல் கல்வியே’

‘மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் திறவுகோல் கல்வியே’

2 mins read
de570804-caaa-48d9-8be0-5fe471009611
கலாசார நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றுகிறார் திரு.லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘நமது இளையர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் மாபெரும் திறவுகோல் கல்வியே’ என்ற வாக்கியத்திற்கு சொந்தக்காரரான நம் பிரதமர் திரு லீ அவர்கள், நான் பிறந்ததிலிருந்து பார்த்து வியந்த மாபெரும் அரசியல் தலைவராவார்.

ராணுவ அதிகாரி, வர்த்தக, தொழில் அமைச்சர், தற்காப்பு அமைச்சர், துணைப் பிரதமர், நிதி அமைச்சர், நாட்டின் பிரதமர் என பல்வேறு அரசியல் தளங்களில் சேவையாற்றிய நம் பிரதமர் அவர்களின் பணி நாட்டில் உள்ள அனைவராலும் போற்றக்கூடிய ஒன்றாகும்.

சிறியவளான எனக்கு முழுமையான அரசியல் பற்றிய அறிவில்லையென்றாலும் சிங்கப்பூரில் பிறந்ததைப் பற்றி பெருமைப்படாத நாளில்லை. அதற்கு வித்திட்டவர் நம் பிரதமர்!

கணிதத்தில் மிகச்சிறந்த அறிவாற்றலும், சீரிய சமூக சிந்தனையும் கடமையில் நேர்மையும், செயலாற்றுவதில் வல்லமையும், தலைசிறந்த ஆட்சி நிர்வாகத் திறனும், இளையர்களிடத்தில் தீராத அன்பும் கொண்டு நம் நாட்டினை 20 ஆண்டு காலமாக உலக அரங்கில் உயர்த்தி வைத்திருக்கும் நம் பிரதமர் அவர்களின் பன்முக ஆற்றலைக் கண்டு நான் வியந்து போகிறேன்.

நவீன சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் மதிப்பிற்குரிய காலஞ்சென்ற திரு லீ குவான் யூ அவர்களின் மூத்த புதல்வராக சிங்கையில் பிறந்து, வளர்ந்தாலும் தனக்கென தனி அடையாளத்தைப் பெற்ற தலைசிறந்த மனிதராகத்தான் அவர் என் கண்களுக்குப் புலப்படுகிறார்.

“ஒரு தேசத்தின் ஆகச் சிறந்த வளம் அங்கு வாழும் நாட்டு மக்களின் குண நலன்களே ஆகும்”, என்ற ஓர் அரசியல் அறிஞரின் கருத்தினை மெய்ப்பிக்கும் வகையில் நம் நாட்டு மக்களின் நற்பண்புகளில் கண்ணும் கருத்துமாக இருந்து, நம்மை செதுக்கிய பெருமை நம் பிரதமர் அவர்களையே சாரும்.

அதோடு பல்வேறு இக்கட்டான காலகட்டங்களிலும் கொவிட்-19 தொற்று நோயின் அச்சுறுத்தல்களிலிருந்தும் நாட்டு மக்களைப் பாதுகாத்து, அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் பல நல்ல திட்டங்களை வழங்கியதோடு, எதிர்கால சமுதாயமாகிய எங்கள் மீதும் பற்றுணர்வு கொண்டு நம் நாட்டினை ஆட்சி செலுத்திய பாங்கினை எங்களால் ஒரு நாளும் மறக்க முடியாது.

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறன்ழுக்கா

மானம் உடையது அரசு. (குறள்-384)

என்ற குறட்பாவிற்கு சான்றாய், நம் நாட்டில் அறம் தவறாது, அல்லவை நீக்கி சமுதாயத்தினை மேன்மையுறச் செய்கின்ற அரசாங்கத்தைத்தான் இவர் முன் நின்று நடத்தியிருக்கிறார்.

மேலும் எதிர்கால சிங்கப்பூரின் நலன் கருதி, ஒரு திறன் பெற்ற அரசியல் தலைவருக்கு வழிவிடும் நோக்கில் செயல்படும் அவருடைய பெருந்தன்மையையும் மாண்பையும் கண்டு தலை வணங்குகிறேன்.

திரு லீ புதன்கிழமையன்று பிரதமர் பதவியை துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான திரு லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைக்க இருக்கிறார். அவருக்கு மாணவர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

ஹரிநேத்ரா வெங்கடேசன் உயர்நிலை 3 கான் எங் செங் பள்ளி

குறிப்புச் சொற்கள்