தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய பிரதமர், புதிய தொடக்கம்

3 mins read
பிரதமர் பதவியை திரு லாரன்ஸ் வோங் புதிதாக ஏற்றாலும் நாட்டின் நலனுக்காக அவர் பற்பல பொறுப்புகளை ஏற்கெனவே நிறைவேற்றியவர் ஆவார். பல்வேறு அமைச்சுகளில் செயலாற்றிப் படிப்படியாக முன்னேறி இவர் நாட்டு மக்களின் கவனத்தையும் மதிப்பையும் மெல்ல ஈட்டினார்.
9e730ec8-ccc5-4d8b-8041-3bab80b804c8
சிங்கப்பூரின் நான்காவது பிரதமரான லாரான்ஸ் வோங்கின் பதவிப் பிரமாண நிகழ்ச்சி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்கள் அனைவரும் மதிக்கப்படவேண்டும். அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும். புதிதாகப் பதவி ஏற்றுள்ள பிரதமர் லாரன்ஸ் வோங், இவ்வாறான தம் நோக்கத்தை வியாழக்கிழமையன்று நடைபெற்ற பிரதமர் பதவியேற்பு விழாவின்போது தெரிவித்தார்.  

அதிபர் தர்மன் சண்முகரத்னம், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் ஆகியோர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டார் திரு வோங். 1972ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதியன்று பிறந்த திரு லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த இந்நாட்டின் முதல் பிரதமராக இருக்கிறார். 

மரின் பரேட் குடியிருப்புப் பேட்டையில் வளர்ந்த திரு வோங், தஞ்சோங் காத்தோங் தொடக்கப் பள்ளி, தஞ்சோங் காத்தோங் உயர்நிலைப் பள்ளி, விக்டோரியா தொடக்கக் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். பொருளியல் துறையில் இளநிலைப் பட்டக்கல்வியை முடித்து, பின் 2004ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

அரசியல் பயணம் 

2011ல் திரு வோங், வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார். தேர்தல் முடிவுக்கு இரண்டு வாரத்திற்குப் பிறகு, அவர் கல்வி, தற்காப்பு ஆகியவற்றுக்கான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 

பல்வேறு அமைச்சுகளில் செயல்பட்டு படிப்படியாக மேன்மை அடைந்த பின்னர் 2014ல் திரு வோங், சமூக, கலாசார இளையர்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர்  திரு வோங், தேசிய வளர்ச்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2020ல், கொவிட்-19 அமைச்சர் நிலை பணிக்குழுவில் திரு வோங், அப்போதைய சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்குடன் இணைத் தலைவராகச் செயல்பட்டார். கொவிட்-19 தொடர்பான விதிமுறைகள், உதவிகள் மற்றும் பல்வேறு முக்கிய மாற்றங்களை அறிவித்து தம் தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்தினார். 

ஏப்ரல் 2022ல் மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைத் தலைவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு, இரண்டு மாதங்களுக்குப் பின் நடந்த அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு அவர் துணையமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் இருந்துகொண்டே திரு லாரன்ஸ் வோங் நிதி அமைச்சராகவும் செயலாற்றினார். 

மக்களுடன் கொண்டாடிய பிரதமர்

அதிபர் மாளிகையில் நடைபெற்ற பதவிப் பிரமாணத்திற்குப் பிறகு, திரு வோங் மார்சிலிங்-யூடி (லிம்பாங்) குழுத்தொகுதி மக்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். 

யூ டி பாயிண்ட் கடைத்தொகுதிக்கு அருகே அமைக்கப்பட்ட கூடாரத்தில் இரவு 8 மணிமுதல் கூடிய  கிட்டத்தட்ட 1,000 வட்டாரவாசிகள், திரு வோங்கின் வருகைக்காகக் காத்திருந்தனர். இரவு 10.30 மணி அளவில் புதிய பிரதமரும் அவரது துணைவியாரும் வந்தனர்.

இளம் வயதுமுதல் பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்று திரு லாரன்ஸ் வோங்கைச் சந்தித்த உயர்நிலை மூன்று மாணவர் சண்முகம் ஷியாம், பதவியேற்பு குறித்து உண்மையிலேயே மிகவும் பெருமை அடைவதாகக் கூறினார். 

“தொடக்கநிலை ஐந்திலேயே நான் இவரைச் சந்தித்திருக்கிறேன். மேடை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற என்னையும் பலரையும் எங்கள் விருப்பங்களைத் தொடரும்படி அவர் ஊக்குவித்தார். பிறருடன் நன்கு பழகக்கூடியவர், பரிவுள்ளம் கொண்டவர் என்பதைப் புரிந்துகொண்டேன்,” என்று அவர் கூறினார். 

இதே போல, மகள் ஹெவன்லி ஜாயுடன் திரு வோங்கிற்காக ஆதரவை வெளிப்படுத்திய ஜெனிஃபர் முனீஸ்வரி, பிரதமர் ஆனாலும் அவரை முன்பு போல கண்டு பேசலாம் என்று திரு லாரன்ஸ் வோங் தம்மிடம் கூறியதாக மனநிறைவுடன் நினைவுகூர்ந்தார்.  

“உடல்நலம் பாதிக்கப்பட்ட என் கணவருக்கான மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்வதற்காக அவர் பெரும் பங்களித்தார். பரிவுமிக்க எங்கள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு வோங், உறுதியாக நாட்டு மக்கள் எல்லோருக்கும் நல்லது செய்வார்,” என்று அவர் கூறினார். 

குறிப்புச் சொற்கள்