தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விளையாட்டுகள் மூலம் பாடம் கற்க மூன்று இணையத் தளங்கள்

2 mins read
லாவண்யா வீரராகவன்
b2c2f365-dad7-4b84-8bf5-c5ec332e7822
படம்: - ஊடகம்
multi-img1 of 2

கடந்த பத்தாண்டுகளில் கற்றல் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது எனலாம். புத்தகங்களைத் தாண்டி பல இணையத் தளங்களும் பள்ளி மாணவர்களின் கல்விக்கு வித்திடத் தொடங்கியுள்ளன.

பாரம்பரிய எழுத்து வடிவத்தை விடுத்து, வண்ணமயமான, விளையாட்டுடன் கூடிய கற்றல் பயணம் மாணவர்களின் விருப்பமான ஒன்றாக இருப்பதோடு, பெற்றோர், ஆசிரியர்களுக்கும் உதவியாக இருக்கின்றன.

எஜுகேஷன்.காம் (https://www.education.com/)

இது விளையாட்டுடன் கூடிய கல்விக்கான இணையத் தளம். ஒத்த ஓசையும் வெவ்வேறு பொருள்களும் கொண்ட ஆங்கிலச் சொற்களுக்கு இடையேயான வேறுபாடுகளை அறிவது, விடுபட்ட சொற்களைக் கண்டறிவது, சொற்களின் வகைமை, உலோக ஆங்கில இலக்கணம் ஆகியவற்றை இந்த இணையத் தளம் வழி கற்கலாம்.

கணிதம் கற்க ‘ஃபிராக்சன்’ அதாவது பின்னங்களைக் கண்டறிதல், ஜியோமெட்ரி எனும் வடிவியல், ‘மல்டிபிள்ஸ்’ எனும் மடங்குகள் ஆகிய எளிய கணக்குப் படங்களை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகளை விடையாடலாம்.

தவிர, ‘பவர்ஸ்’, ‘மிக்ஸட் ஃபிராக்சன்ஸ்’ எனும் கலப்பு பின்னங்கள், ‘அரே’ எனும் வரிசைகள் ஆகிய கடினமான கணிதத் திட்டங்களை விளையாட்டு மூலம் கற்க இந்த இணையத்தளம் உதவுகிறது.

மேலும், பல அறிவியல் செயல்முறை திட்டங்களும் பாடங்களும் இந்தத் தளத்தில் கிடைக்கின்றன.

மிஸ்டரிசயின்ஸ்.காம் (https://mysteryscience.com/)

பாலர் பள்ளி முதல் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் வரை, அவர்களுக்கு விருப்பமான அறிவியல் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள உதவும் இலவச இணையத் தளம் இது.

விலங்குகள், தாவரங்கள் எனப் பல்லுயிர், அதன் வாழிடங்கள் குறித்த அறிவியல் தகவல்கள் முதல் விமானம் இயங்கும் முறை, வானியல், எரிமலைகள், விசை, வீக்கம் உள்ளிட்ட இயற்பியல் தகவல்களை இதன் மூலம் அறியலாம்.

ஆற்றல், வேதியியல், தசை, எலும்பு என மனித உடல் குறித்த அறிவு தொடங்கி அனைத்து அறிவியல் கூறுகளையும் காணொளி, செயல்பாடு முறை மூலம் கற்க இந்த இணையத் தளம் பயன்படும்.

ஃபன் பிரெய்ன்.காம் (https://www.funbrain.com/)

குழந்தைகளுக்கான இணைய நூல்கள் கிடைக்கும் இணையத் தளம் இது. அதுமட்டுமன்றி, உலக வரைபடம் குறித்த தகவல்களை அறிய வண்ணமயமான விளையாட்டும் இதில் அடங்கும். குறிப்பிட்ட நாட்டை வரைபடத்தில் குறிப்பது, படத்தைக் கொண்டு இடத்தைக் கண்டறிவது உள்ளிட்டவை மூலம் மாணவர்கள் ஜியோகிராஃபி (நிலவியல்) பாடத்தில் பெரும் திறன் பெறலாம்.

இசையுடன் கூடிய கணித விளையாட்டுகள், படக் கதைகள், சதுரங்கம், சுடோகு ஆகிய மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளும் இந்த இணையத் தளத்தில் விளையாடலாம்.

பாலர் பள்ளி தொடங்கி, எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்படுத்த சிறந்த இணையத் தளம் இது.

குறிப்புச் சொற்கள்