தமிழரின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம் அறிய உதவிய தாய்மொழி விழா

தமிழரின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம் அறிய உதவிய தாய்மொழி விழா

2 mins read
f7e6ada6-8819-47c0-a94e-fc4bdeed5de3
மரத்தால் தயாரிக்கப்பட்ட பல்லாங்குழியும் அதற்கான சோலி என்று சொல்லப்படும் காய்களும். - படம்: இணையம்
multi-img1 of 2

சிங்கப்பூரில் பல்வேறு பள்ளிகளும் தமிழ் மொழியின் வளமான மரபு, கலாசாரத்தை மாணவர்களுக்கு விளக்குவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் தாய்மொழி இரண்டு வார தாய்மொழிவிழாவைக்(MTL Fortnight) கொண்டாடுகின்றன.

கல்வி அமைச்சும் இதர பல கலாசார அமைப்புகளும் ஒன்றிணைந்து நடத்திய இந்த இரண்டு வார நடவடிக்கைகள், மாணவர்களை ஈர்க்கவும் அவர்களது தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும் தமிழ்க் கற்றலுக்கு மேலும் சுவையூட்டும் வகையிலும் நடத்தப்பட்டது.

அத்துடன், தமிழரின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள இருவார தாய்மொழி விழா உதவியது.

எங்கள் பள்ளியில் அனைத்து இன மாணவர்களும் அவரவர் கலாசாரத்திற்கேற்ப மலாய் ஆடைகளை அணிந்து பார்ப்பது, சீனக் குடைகளைச் செய்வது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த அனுபவம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

தமிழ் மாணவர்களுக்காக இசைக்கருவிகளை வாசிப்பது, பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், விளக்குகளில் வண்ணம் தீட்டுதல், ரங்கோலி, உறியடி போன்ற பல பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சி, பலவித விளையாட்டுகளையும் விளையாடி மகிழ்வதற்கும் தமிழ் பாரம்பரியத்தை கற்றுக்கொள்வதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

அனைத்து விளையாட்டுகளிலும் ‘உறியடித்தல்’ விளையாட்டு எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

உறியடித்தல் அல்லது பானை உடைத்தல் என்ற இந்த விளையாட்டு பொங்கல் பண்டிகையின் போது அல்லது ஊர்த் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் தமிழர் விளையாட்டாகும்.

இளைஞர்களால் விளையாடப்படும் உறியடித்தல் என்பது கண்ணைக் கட்டிக்கொண்டு பானையை உடைக்கும் விளையாட்டாகும்.

நாம் நினைப்பது போல் கண்ணைக் கட்டிக்கொண்டு பானையை உடைப்பது அவ்வளவு எளிதல்ல.

விழாக்காலங்களில் நடைபெறும் இந்த விளையாட்டை விளையாட இரு மூங்கில் கம்புகள் நடப்பட்டு அவற்றிற்கு இடையே கயிறு கட்டி, கயிற்றின் நடுவே மண்பானை கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கும். சற்று தூரத்தில் எல்லைக்கோடுகள் போடப்பட்டிருக்கும்.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் அந்த எல்லைக்கோட்டில் வரிசையாக நிற்கவேண்டும்.

கலந்து கொள்பவர்களின் கண்களை துணியால் கட்டிவிட, அவர்கள் கையில் ஒரு நீளமான கழியைக் கொடுத்து, அவர்கள் குறிப்பிட்ட திசையைக் கண்டுபிடிக்க முடியாதவாறு நான்கைந்து சுற்றுகள் சுற்றி விடுவார்கள்.

இவ்வாறு சுற்றி விடுவதால் பானை இருக்கும் திசையை அவ்வளவு எளிதாக நம்மால் அறிய முடியாது.

குறிப்பிட்ட நேரத்திற்குள் பானை இருக்கும் திசை நோக்கிச் சென்று, கையிலுள்ள கம்பினால் யார் பானையை உடைக்கிறார்களோ அவரே போட்டியில் வென்றவராக அறிவிக்கப்படுவார்.

அவருக்குப் பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டியில் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டது மிகுந்த உற்சாகமாக இருந்தது.

இந்த விளையாட்டு, இயங்கிக்கொண்டிருக்கும் பொருளின் மீது குறிவைத்து, கண்கள் மூடிய நிலையிலும் இலக்கை அடைந்து வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும் என்பதை எங்களுக்கு உணர்த்தியது.

S.J. அன்ஷிகா

தொடக்கநிலை 6

ஹவ்காங் தொடக்கப்பள்ளி

குறிப்புச் சொற்கள்