தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

களைகட்டிய பட்டிமன்ற நிகழ்வு; சமூகமே, தந்தையே என்ற தலைப்புகளில் வாதிட்ட மாணவர்கள்

2 mins read
d6bc4949-7682-492f-b169-fe4adc90b118
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள். - படம்: ம. சரவணகுமார்
multi-img1 of 2

‘அனைவருக்கும் குறள்’ எனும் ஃபேஸ் புக் அமைப்பின் ஐந்தாம் ஆண்டு, திருக்குறள் சார்ந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கான ‘குறளோடு விளையாடு’ முதலாம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் ஜூன் எட்டாம் தேதி மாலை குயின்ஸ்டவுன் நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

லதா மாசிலாமணி திருக்குறள் வாழ்த்து கூறி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

அன்றைய சிறப்பு நிகழ்வாக “குறள் நெறிப்படி குழந்தைகளின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பது தந்தையே, சமூகமே” என்ற தலைப்பில் பட்டிமன்ற நிகழ்வு தொடங்கியது.

நடுவராகப் பங்கேற்ற முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன் திருக்குறளின் முக்கியத்துவம் பற்றியும் அது வருங்காலத்தில் தழைத்தோங்க ஒவ்வொரு வீடுகளிலும் போதிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் நயம்பட விளக்கினார்.

‘தந்தையே’ என்ற அணியில் பங்கேற்ற குழந்தைகள் நிரல்யா, தனேகா, யாழ் பாரதி ஆகிய மூவரும் தந்தையின் சிறப்புகளைக் கூறி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

‘சமூகமே’ என்ற அணியில் பங்கேற்ற குழந்தைகள் பிரபு ஜஷ்வந்த், அர்ஜுன் ஆனந்த், யுக்தஸ்ரீ ஆனந்த் ஆகிய மூவரும் சமூகம்தான் குழந்தைகளின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது என மிக அழுத்தமாக வாதிட்டனர்.

இரு அணியினரும் பேசியபோது கைத்தட்டல்கள் குவிந்தன.

மாணவர்களின் கருத்துகளை நினைவு கூர்ந்து, விளக்கம் அளித்து அவர்களைப் பாராட்டிப் பேசிய நடுவர், இரண்டு பக்க கருத்துகளையும் அலசி ஆராய்ந்து, சமூகத்தின் அக்கறையையும் அது குழந்தைகளுக்காக ஆற்றும் உதவிகளையும் திருக்குறளைக் கொண்டு விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து, “என்னதான் இந்த சமூகம் குழந்தைகளின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்தாலும் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் அடித்தளமாக அமைவதும் அந்த குழந்தையின் முன்னேற்றத்திற்கு பெரும்பங்கு வகிப்பதும் தந்தையே,” என்று தீர்ப்பு கூறி பட்டிமன்றத்தை நிறைவு செய்தார்.

மேலும் குழந்தைகள் அவர்களின் இனிய மழலையில் திருக்குறள்களைக் கூறியும் நடித்தும் காட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

செய்தி: ஹேமா ஸ்வாமிநாதன்

குறிப்புச் சொற்கள்