தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுவர்களை வியப்பில் ஆழ்த்தும் தென்கிழக்காசிய மீன் காட்சியகம்

2 mins read
1a3eb8ac-9a70-48fc-9943-1fcc1dcd3168
உலகின் ஆகப் பெரிய நீர்வாழ் உயிரினக் காட்சியகங்களில் ஒன்று ‘செந்தோசா’வில் உள்ள தென்கிழக்காசிய நீர்வாழ் உயிரினக் காட்சியகம். - படம்: ரவி சிங்காரம்

ஜூன் விடுமுறை நாள்களில் கடலின் அதிசயங்களை நேரில் காணவிரும்பும் சிறுவர்களின் ஆசைகளைப் பூர்த்திசெய்கிறது ‘செந்தோசா’வில் உள்ள தென்கிழக்காசிய நீர்வாழ் உயிரினக் காட்சியகம்.

உலகின் ஆகப்பெரிய நீர்வாழ் உயிரினக் காட்சியகங்களில் ஒன்றாக விளங்கும் இங்கு உலகெங்கிலும் இருந்து 40க்கும் மேற்பட்ட இருப்பிடங்களைச் சார்ந்த ஆயிரத்துக்கும் கூடுதலான இனங்களில் இருந்து 100,000க்கும் மேற்பட்ட நீர்வாழ் உயிரினங்கள் உள்ளன.

காட்சியகத்தினுள் நுழைந்ததும் சுற்றிலும் கண்ணைப் பறிப்பது விதவிதமான மீன்கள்தான்!

இது சுறாவா, ஸ்டிங்ரேவா என்ற கேள்விக்கு சிறுவர்கள் விடை காண்பர்.
இது சுறாவா, ஸ்டிங்ரேவா என்ற கேள்விக்கு சிறுவர்கள் விடை காண்பர். - படம்: ரவி சிங்காரம்

மீன் என்றால் என்ன? சுறாக்கள், ஸ்டிங்ரேக்களும் மீன்களா? மீன்கள் எப்போது தூங்குகின்றன? போன்ற சிறுவர்களின் கேள்விகளுக்கு விடையளிக்கிறது இக்காட்சியகம்.

மீன்களின் இனங்களைப் பொறுத்து வாய்மூலம் மட்டுமன்றி, தம் மற்ற உடல் பகுதிகளாலும் சுவைக்க இயலும், மீன்களுக்குக் காது கேட்கும் போன்ற பல சுவாரசியமான தகவல்களையும் சிறுவர்கள் அறிந்துகொள்வர்!

பல்வகை நீர்வாழ் உயிரினங்கள்

டைனோசர்கள் உலகில் காலடி வைப்பதற்கு முன்பு தோன்றிய முதல் நீர்வாழ் உயிரினங்களில் ஒன்றுதான் நீர்பஞ்சு (sea sponge) என நிபுணர்கள் கூறியுள்ளனர். அவற்றையும் சிறுவர்கள் காணலாம்.

ஜெல்லிமீன்களைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு தனி அங்கமே உள்ளது.
ஜெல்லிமீன்களைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு தனி அங்கமே உள்ளது. - படம்: ரவி சிங்காரம்

‘இருகாண்ட்ஜி ஜெல்லி’க்கள் சிங்கப்பூர் ஐந்து காசு நாணயம் அளவிற்கு சிறிதாக இருந்தாலும் ஆக அதிக நச்சுத்தன்மை வாய்ந்த ஜெல்லிமீன்களில் அடங்கும். ‘பெட்டி ஜெல்லி’க்களின் விஷம், ஒரு வளர்ந்த மனிதரின் உயிரை ஐந்து நிமிடத்திற்குள் பறிக்கக்கூடியது!

‘அறிவியல் கலையைச் சந்திக்கிறது’ என்ற கண்காட்சியில் நீர்வாழ் உயிரினங்கள் பதப்படுத்தியும் வைக்கப்பட்டுள்ளன.
‘அறிவியல் கலையைச் சந்திக்கிறது’ என்ற கண்காட்சியில் நீர்வாழ் உயிரினங்கள் பதப்படுத்தியும் வைக்கப்பட்டுள்ளன. - படம்: ரவி சிங்காரம்

3Rs எனப்படும் மறுபயன்பாடு, பயன்பாட்டைக் குறைத்தல், மறுசுழற்சி செய்தலின் அவசியம்

ஆண்டுதோறும் நெகிழிப் பைகள் 100,000க்கும் மேற்பட்ட நீர்வாழ் உயிரினங்களின் இறப்புக்குக் காரணமாகின்றன.

மிதக்கும் நெகிழிப் பைகள் ஜெல்லிமீன்களைப் போன்று உருவம் கொண்டுள்ளதால் ஜெல்லிமீன்களை உண்ணும் உயிரினங்கள் அவற்றைத் தவறுதலாக உண்டு செரிமானப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன.

“முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள், மின்சார உபயோகத்தைக் குறையுங்கள், நெகிழி, உலோகப் பொருள்களைப் பயன்படுத்தாதீர்கள்,” என நீர்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்த பல நல்ல படிப்பினைகளைச் சிறுவர்கள் கற்றுக்கொள்வர்.

சிறுவர்களுக்கான சுவாரசிய நிகழ்ச்சிகள்

‘ஜூனியர் கடல் துப்பறிவாளர்’ திட்டம்வழி 7 முதல் 12 வயதிலான சிறுவர்கள் நீர்வாழ் உயிரினங்கள் சார்ந்த மர்மங்களுக்குத் தீர்வுகாண்பர். எவ்வாறு மீனும் கடல் பாம்பும் நண்பர்களாகமுடியும்? ஏன் அழகான சிங்கமீனுக்கு நல்ல வரவேற்பில்லை? மேலும், நிபுணருடன் உரையாடி, நீர் உயிரினங்களைப் பாதுகாப்பதைப் பற்றி அறிந்துகொள்வர்.

உயிரினங்களை எப்படி வளர்ப்பது, அவற்றுக்கான உணவுகளை எவ்வாறு தயாரிப்பது போன்றவற்றைக் கற்பிக்கும் ஆய்வகமும் சிறுவர்களை வரவேற்கிறது.

முக்குளித்து உயிரினங்களுக்கு உணவிடுதலைக் கண்டும் சிறுவர்கள் மகிழலாம். ஜூலை 19 வரை நடைபெறும் ‘பெருங்கடல் விழா’ போன்று மேலும் பல்வகையான நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

காட்சியகத்துக்கு வெளியே உள்ள கடையில் சிறுவர்களுக்குத் தாம் கற்றதை நினைவுபடுத்தும் நூல்களையும் விதவிதமான பொருள்களையும் வாங்கிக்கொள்ளலாம்!

முக்குளித்து உயிரினங்களுக்கு உணவிடுதலைக் கண்டும் சிறுவர்கள் மகிழலாம். நட்சத்திர மீனைத் தொட்டும் மகிழலாம்.
முக்குளித்து உயிரினங்களுக்கு உணவிடுதலைக் கண்டும் சிறுவர்கள் மகிழலாம். நட்சத்திர மீனைத் தொட்டும் மகிழலாம். - படங்கள்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்