கதிரவன் மிகவும் நேர்மையானவர். அவர் ஒரு பழத் தோட்டம் வைத்திருந்தார்.
மழை பெய்யாததால் மரங்கள் வாடின. அதனால் தோட்டத்தின் அருகில் இருந்த கிணற்றை விலைக்கு வாங்க எண்ணினார் கதிரவன்.
அந்தக் கிணற்றின் உரிமையாளர் அந்தக் கிணற்றைப் பயன்படுத்தியதே இல்லை. அதனால் வேலாயுதத்திடம் இருந்து அந்தக் கிணற்றை விலைக்கு வாங்கினார்.
கதிரவன் கிணற்றில் உள்ள நீரை எடுத்துப் பழத்தோட்டத்திற்கு ஊற்றினார். அதனால் மரங்களில் பழங்கள் பழுத்து தொங்கின.
அதனால் கதிரவன் சந்தையில் தன் தோட்டத்தில் விளைந்த பழங்களை விற்று மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கினார்.
கதிரவன் நேர்மையுடன் அதிக விலை இல்லாமல் நல்ல பழங்களாக விற்றதால் அவர் கடையில் எப்போதும் பழங்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
அதைப் பார்த்ததும் கதிரவன் மீது வேலாயுதத்திற்கு பொறாமை ஏற்பட்டது.
ஒருநாள் வழக்கம்போல் பழங்களை விற்று முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார் கதிரவன்.
தொடர்புடைய செய்திகள்
அதைப் பார்த்த வேலாயுதம் கதிரவனிடம் இருந்து பணத்தை வாங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
“கதிரவன்! நான் கிணறு விற்கும்போதே சொல்லவேண்டும் என்று இருந்தேன். ஆனால் நான் அவசர வேலையாக வெளியூர் சென்றுவிட்டு நேற்றுதான் திரும்பினேன்.
“நான் உங்களுக்கு கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதில் இருக்கும் தண்ணீரை அல்ல.
“நீங்கள் அந்தத் தண்ணீரைப் பயன்படுத்த விரும்பினால் அதற்கு எனக்கு தினமும் கட்டணம் செலுத்தவேண்டும்,” என்றார்.
அவரின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொண்டார் கதிரவன்.
அவரும் உடனே வேலாயுதத்தைப் பார்த்து, “நானே உங்களிடம் சொல்லவேண்டும் என்று இருந்தேன். நீங்கள் ஊரில் இல்லாததால் என்னால் உங்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
“எனக்கு கிணறு மட்டும் போதும். அதில் இருக்கும் உங்களுடைய தண்ணீர் எனக்கு வேண்டாம்.
“கிணற்றில் இருக்கும் நீரை வெளியேற்றிவிட்டு கிணற்றை மட்டும் என்னிடம் கொடுங்கள். இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில் நீங்கள் உங்களுக்கு சொந்தமான தண்ணீரை வைத்திருப்பதற்காக நீங்கள் தினமும் எனக்கு வாடகை செலுத்தவேண்டி இருக்கும்,” என்றார்.
அதைக் கேட்டதும் வேலாயுதம் நன்றாக மாட்டிக்கொண்டோமே என்று மனதிற்குள் வருந்தி, “பரவாயில்லை கதிரவன். அந்தத் தண்ணீரை நீங்களே பயன்படுத்திக்கொள்ளுங்கள்,” என்று கூறி தலைதெறிக்க அந்த இடத்தை விட்டு வேகமாக நடந்தார்.
கதிரவன் வேலாயுதத்தின் நிலையை எண்ணி சிரித்துக்கொண்டே வீடு திரும்பினார்.
வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பது இக்கதையின் நீதி.

