கடலைக் கறுப்பாக்கிய எண்ணெய்க் கசிவு

கடலைக் கறுப்பாக்கிய எண்ணெய்க் கசிவு

2 mins read
31d4e8a0-636d-4e91-8bbb-41615e64f41f
எண்ணெய்யை உறிஞ்சும் குழாய்களை போடுகிறார் துப்புரவுப் பணியாளர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பள்ளி விடுமுறையில் கடற்கரைக்குச் சென்று விளையாடத் திட்டமிட்டு இருந்தவர்களுக்கு சிங்கப்பூரில் பல கடற்கரைகளில் எண்ணெய்க் கசிவு காரணமாக பொதுமக்களுக்கு சில இடங்கள் தடைசெய்யப்பட்டு இருக்கின்றன என்ற செய்தி ஏமாற்றத்தை அளித்திருக்கும்.

என்ன நடந்திருக்கும் என்று நினைத்து இருப்பீர்கள். இதோ உங்களுக்காக...

ஜூன் 14ஆம் தேதி சிங்கப்பூர் கொடி தாங்கிய ‘பங்கர்’ கப்பலான ‘மரின் ஹானர்’ எனும் எண்ணெய்க் கப்பலை நெதர்லாந்து கொடி ஏற்றப்பட்டிருந்த ‘டிரட்ஜர் வோக்ஸ் மாக்ஸிமா’ எனும் படகு மோதியது.

அதையடுத்து எண்ணெய்க் கப்பலில் இருந்து சுமார் 400 டன்னிற்கும் மேற்பட்ட எண்ணெய் கடலில் கொட்டியது.

அதனால் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, லெப்ரடோர் இயற்கைவனம், கெப்பல் பே, செந்தோசாவின் தென்தீவுகள் போன்றவற்றின் கடற்கரைகளில் எண்ணெய்க் கறை படிந்தது.

அதனால்தான் சிங்கப்பூரர்கள் விரும்பிச் செல்லும் ஈஸ்ட் கோஸ்ட், செந்தோசா கடற்கரைகள் மூடப்பட்டன.

கடல் அலைகளால் சிங்கப்பூரின் தெற்குக் கரை வரை எண்ணெய்க் கசிவு பரவியது.

கடலின் நீர்ப்பரப்பில் காணப்படும் எண்ணெய்க் கசிவு கடல் அலைகளால் நகர்ந்துகொண்டே இருப்பது துப்புரவுப் பணிக்குச் சவாலாக இருப்பதாக கூறப்பட்டது.

இப்பணியில் உதவ ஆளில்லா வானூர்திகளையும் செயற்கைக்கோள் படங்களையும் பயன்படுத்தி எண்ணெய் பரவி இருக்கும் இடங்களைக் கண்காணித்து, துப்புரவுப் பணிகளைச் செய்து வருகிறார்கள்.

நீர்ப்பரப்பின்மேல் காணப்படும் அடர்ந்த எண்ணெய் படலத்தை நீக்க 4 ‘கரண்ட் பஸ்டர்’ என்ற கருவியும் 4 ‘ஸ்கிம்மர்’ எனப்படும் கருவியும் பயன்படுத்தப்படுகிறது.

செந்தோசாவில் உள்ள மூன்று கடற்கரைகளில் ஜூன் 15ஆம் தேதி முதல் 71,000 கிலோகிராமுக்கும் மேற்பட்ட எண்ணெய் கலந்த மணல் அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் கடற்கரையோரப் பகுதிகளில் துப்புரவுப் பணிகள் முழுமையாக நிறைவடைய கூடுதல் காலம் பிடிக்கும். அதுவரை பொதுமக்கள் பொறுமையுடனிருக்கும்படி அரசு கேட்டுக்கொண்டு இருக்கிறது.

கடற்கரைப் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டாலும் நீரின் தரம் வழக்கநிலைக்குத் திரும்பிய பின்னரே நீச்சல், நீர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.

துப்புரவுப் பணியில் 18 படகுகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், தேசியப் பூங்காக் கழகம், தேசிய சுற்றுப்புற அமைப்பு, செந்தோசா மேம்பாட்டுக் கழகம் ஆகியவை தெரிவித்தன.

தொடர்ந்து 1,500 தன்னார்வு தொண்டூழியர்களும் 700 துப்புரவு செய்யும் தொழிலாளர்களுடன் இணைந்து துப்புரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்