காலைப்பொழுது மலர்ந்தது. சூரியன் தன் பொற்கரங்களை நீட்டி உலகிற்கு ஒளிதந்து கொண்டிருந்தான். பறவைகள் ‘கீச், ‘கீச், என்று சத்தமிட்டுப் பறந்தன.
ரவி, பாலா, அலி மூவரும் நகமும் சதையும்போல் இணை பிரியாத நண்பர்கள். நண்பர்களுக்கு கூடைப்பந்து விளையாடுவது என்றால் மிகவும் விருப்பம். கூடைப்பந்து விளையாட்டின் மூலம்தான் மூவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
அவர்கள் நேரம் கிடைக்கும்போது எல்லாம் தங்களது வீட்டின் அருகில் இருக்கும் கூடைப்பந்து விளையாடும் இடத்தில் ஒன்று கூடுவார்கள். பின்னர் நேரம் போவது தெரியாமல் கூடைப்பந்து விளையாடுவார்கள்.
அன்றும் வழக்கம்போல மூவரும் தங்களுடைய வழக்கமான இடத்தில் ஒன்றுகூடினர். ரவி கொண்டு வந்திருந்த பந்தை வைத்து விளையாடத் தொடங்கினார்கள்.
அவர்களின் முகமும் உடலும் வியர்வையில் நனைந்தன. ஆனால், அவர்கள் சிறிதும் களைப்படையவில்லை. தொடர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. குளிர் காற்று இதமாக வீசியதால் தொடர்ந்து அசுர வேகத்தில் விளையாடினார்கள்.
திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. அந்த மழையில் விளையாடுவது அவர்களுக்குப் புதுமையாக இருந்தது. மழையுடன் மின்னலும் இடியும் சேர்ந்துகொண்டன.
சிங்கப்பூரில் மழை பெய்யும்போது பலத்த இடி, மின்னல் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. அன்றும் மழையுடன் இடியும் மின்னலும் சேர்ந்து வானத்தைப் பளிச் பளிச்சென்று மின்னல் கீற்றுகளால் ஒளிமயமாக்கியது.
தொடர்புடைய செய்திகள்
அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து விளையாடினார்கள். வானத்தில் இருந்து மின்னல் கண்ணைப் பறிக்கும் அளவிற்கு ஒளிர்வதையும் அதைத் தொடர்ந்து வானம் மத்தளம் அடிப்பதுபோல் இடிப்பதையும் ரசித்தனர்.
ரவி, “வாருங்கள் நாம் வீடு திரும்பலாம். இடி இடிக்கத் தொடங்கிவிட்டது. மேலும் கண்ணைப் பறிப்பதுபோல் மின்னலும் அடிக்கிறது. இதில் தொடர்ந்து விளையாடுவது ஆபத்து,” என்று கூறினான்.
ஆனால், பாலா, அலி அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் ஐந்து நிமிடம் என்று கூறி விளையாடிக்கொண்டே இருந்தார்கள்.
ரவியின் அம்மா வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அவர் வழியில் தன் மகனோடு அவனுடைய நண்பர்களும் கனத்த மழையில் விளையாடுவதைப் பார்த்ததும் அவர் கண்களில் கோபம் தெறித்தது.
அவர்களை நோக்கிச் சென்று, “மழை, மின்னல், இடி என்று இருக்கும்போது விளையாடக்கூடாது என்று உங்களுக்குத் தெரியாதா? உயர்நிலையில் படிக்கும் நீங்கள் அதுபற்றி கேள்விப்பட்டது இல்லையா?
“அண்மையில் செய்தித்தாளில் இதுபோன்று விளையாடிக்கொண்டு இருக்கும்போது மின்னல் தாக்கி மாணவன் உயிரிழந்தார் என்ற செய்தியை நீங்கள் படிக்கவில்லையா? மழையில் திறந்த வெளியில் விளையாடுவது மிகவும் ஆபத்து!
“மேலும் பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது இடி, மின்னல் அடிக்கும்போது மரங்களுக்கு அடியில் நிற்கக்கூடாது. மின்னல் மரங்களைத்தான் அதிகம் தாக்கும்.
“சிங்கப்பூரில் அனைத்து அடுக்குமாடி வீடுகளிலும் இடிதாங்கும் கருவி பொருத்தப்பட்டு இருப்பதால் மழை நிற்கும் வரை அடுக்குமாடித் தளத்தில் பாதுகாப்பாக நின்றுகொள்ளலாம். மின்னல் தாக்காது,” என்று அறிவுரை கூறிக்கொண்டே அடுக்குமாடித் தளத்தை அடைந்தார்.
மூவரும் தங்களுடைய தவற்றை உணர்ந்தனர். இனி இதுபோல் மழை, இடி, மின்னலில் பொது வெளியில் விளையாடக்கூடாது என்பதை உணர்ந்து அவரவர் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
கேசவ் சதீஷ் நாயர்
தொடக்கநிலை 6, பொங்கோல் கிரீன் தொடக்கப் பள்ளி

