தேசிய தின அணிவகுப்பின் தேசியக் கல்விக் காட்சியைப் பாடாங் அரங்கில் 10,000க்கும் அதிகமான தொடக்கநிலை 5 மாணவர்கள் அமர்ந்து தேசப்பற்றுடன் கண்டுகளித்தனர்.
தேசிய தின அணிவகுப்பை ஒட்டி இவ்வாண்டு நடத்தப்படும் நான்கு தேசியக் கல்வி நிகழ்ச்சிகளில் முதலாவதான இந்நிகழ்ச்சி, சனிக்கிழமையன்று (ஜூன் 29) நடைபெற்றது.
தீவெங்கிலும் உள்ள 70 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர்.
“ஒன்றாய் ஒன்றுபட்ட மக்களாய்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சி, ‘எங்கள் சிங்கப்பூர்’ என்ற உள்ளூர்த் தமிழ்ப்பாடலுடன் தொடங்கியது.
சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த செஞ்சிங்க அணியின் ஐந்து வான்குடை வீரர்கள் தரையிறங்கியதை மாணவர்கள் தேசியக் கொடிகளை அசைத்துக்கொண்டும் ஒலி எழுப்பும் கருவிகளை இயக்கிக் கொண்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
1989ஆம் ஆண்டில் முதன்முதலாக தேசிய தின அணிவகுப்புகளில் செயல்பட தொடங்கிய வான்குடை சாகசக் குழுவான சிவப்பு சிங்கங்களின் அணி, இவ்வாண்டு தனது 35ஆம் ஆண்டு நிறைவை எட்டுகிறது.
சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையின் எஃப்-16 போர்விமானங்களும் தரைப்படையின் ‘2எஸ்ஜி’ கனரகப் போர் வாகனமும் இடம்பெற்றன.
முழுமைத் தற்காப்புக்கான துடிப்புமிக்க தற்காப்புக் காட்சியும் நிகழ்ச்சியில் அங்கம் வகித்தது.
தொடர்புடைய செய்திகள்
பயங்கரவாத மிரட்டலை பாவனை செய்த அங்கத்தில் ஒலித்தத் துப்பாக்கி குண்டு சத்தம், மாணவர்களைத் திகிலில் ஆழ்த்தியது. இருந்தபோதும், மிரட்டல்களை அதிகாரிகளுக்குத் தெரிவிக்க எஸ்ஜிசெக்யூர் செயலி பற்றிய விழிப்புணர்வையும் அந்த அங்கம் ஏற்படுத்தியது.
இரவு ஏழு மணிக்குப் பிறகு இருள் மெல்லச் சூழ, அணிவகுப்பின் வண்ண விளக்கு ஒளி ஜாலம் புதியதோர் உச்சகட்டமாக அமைந்தது. பார்வையாளர்கள் தங்கள் மின்விளக்குகளை நாட்டுப்பற்றுப் பாடல்களுக்கு அசைக்க, எல்இடி ஒளித்திரைகளும் அணிவகுப்பு மேடையிலுள்ள ஒளிமிகு கனச்சதுரங்களும் கண்களுக்கு விருந்தளித்தன.
பலவண்ண உடைகளில் கலைஞர்கள் ஆடிப்பாடி, சிங்கப்பூரின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எனப் பல அம்சங்களை சுவையுடன் வெளிக்கொணர்ந்தனர்.
அத்துடன், குறுங்காணொளிகளில் கொவிட்-19 சமயத்தில் சமுதாயத்திற்கு அரும் தொண்டாற்றியோருக்கு நன்றி செலுத்தப்பட்டது. அணிவகுப்பின் முத்தாய்ப்பாக வாணவேடிக்கை அங்கம் ஆக இறுதியாக இடம்பெற்றது.
பிரம்மிப்பூட்டும் புதிய அனுபவம்
அணிவகுப்பு நிகழ்ச்சியைக் கண்டு ரசித்த அம்சங்களைப் பற்றி பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மாணவர்கள் சிலர் எங்களிடம் பகிர்ந்தனர்:
அமுதினி பார்த்தசாரதி, 11, வெஸ்ட்குரோவ் தொடக்கப்பள்ளி, தொடக்கநிலை 5:
“இந்த தேசிய தின அணிவகுப்பை ஒட்டிய தேசியக் கல்வி நாளுக்கான நிகழ்ச்சியில் என் அக்கா தொடக்கநிலை ஐந்தாம் வயதில் பார்த்ததைப் பற்றி என்னிடம் பகிர்ந்தார். வாணவேடிக்கைகளைப் பற்றி என் அக்கா கூறியபோது எனக்கு ஆவலாக இருந்தது. நான் சிங்கப்பூரில் பிறந்திருந்தபோதும் இந்நாட்டில் வாணவேடிக்கைகளைக் காண்பது இதுவே முதல்முறை. அனைவரும் ஒருங்கிணைந்து இந்த நிகழ்ச்க்கு ஏற்பாடு செய்தது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.”
ராகவன் கண்ணப்பன், 11, சி லிங் தொடக்கப்பள்ளி, தொடக்கநிலை 5:
“மிகப் பெரிய வளாகமான பாடாங்கிற்கும் அதன் சுற்று வட்டாரத்திற்கும் நான் முதன்முறை வந்துள்ளேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ராணுவ அணிவகுப்பையும் போர்விமானத்தையும் காண்பதும் எனக்கு உற்சாகம் அளிக்கிறது.”
கண்ணன் பிரேம்குமார், 11, சின்ஹுவா தொடக்கப்பள்ளி, தொடக்கநிலை 5:
“சிங்கப்பூரின் 59 பிறந்தநாளை என் பள்ளி நண்பர்களுடன் கொண்டாட வந்துள்ளேன். நடுத்தர வயதை எட்டியுள்ள நம் நாடு சாதித்துள்ளதை எண்ணி எனக்குப் பெருமையாக இருந்தது.”

