அகத்தின் அழகே அழகு

அகத்தின் அழகே அழகு

2 mins read
004ca3ae-e8f3-412b-814a-1a7701d67122
மரத்தில் அழகிழந்த குருவியும் காகம் பேசிக்கொண்டு இருக்கின்றன. - படம்: தமிழ் முரசு

ஓர் ஆலமரத்தில் குருவி ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் குருவி பல வண்ணங்களில் மிகவும் அழகாக இருந்தது. அதனால் அது மிகவும் கர்வத்துடன் இருந்தது. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போதுகூட அவற்றின் அழகைப் பார்த்தே தேர்வு செய்தது.

ஒருநாள் காகம் ஒன்று அந்த மரத்தில் வந்து அமர்ந்தது. அது தன்னுடைய குரலில், “காகா”, என்று கத்தி குருவியுடன் நட்பாகப் பேசியது.

“நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உன்னுடைய நண்பனாக இருக்க எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது. என்னை நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?” என்று ஆவலுடன் கேட்டது காகம்.

அதற்கு அந்தக் குருவி, “நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன். நீ உன் முகத்தை குளத்தில் இருக்கும் நீரில் போய்ப் பார். அப்போதுதான் உனக்கு நீ எவ்வளவு அசிங்கமாக கறுப்பாக இருப்பது தெரியும்,” என்று ஏளனமாகப் பேசி விரட்டியது.

காகமும் தன்னுடைய நிலையை எண்ணி வருந்தி அங்கிருந்து பறந்து சென்றது.

சில நாள்களுக்குப் பிறகு ஒருநாள் தன் கூட்டிற்குத் திரும்பும் வழியில் அந்த ஆலமரத்தைப் பார்த்தது.

அந்தோ பரிதாபம்! அங்கு தங்கியிருந்த குருவி தன் அழகிய இறகை எல்லாம் இழந்து அழகு இல்லாமல் இறக்கும் தறுவாயில் இருந்தது. அதைப் பார்த்த காகம் பதறிப்போய் குருவியிடம் சென்று, “அழகிய குருவியே! உனக்கு ஏன் இந்த நிலை?” என்று கவலையுடன் கேட்டது.

அப்போது அந்தக் குருவி, “எனக்கு உடல்நலம் இல்லாததால் என்னால் பறந்து சென்று உணவு தேட முடியவில்லை. அதனால் என் உடலில் ஊட்டச் சத்து குறைந்துவிட்டது. ஊட்டச் சத்து இல்லாததால் இறக்கைகள் அனைத்தும் உதிர்ந்துவிட்டன. அதனால் என்னால் பறக்கவும் முடியவில்லை,” என்று கூறியது.

அதைக் கேட்ட காகம், “கவலைப்படாதே! நான் உனக்கு உணவு தேடித் தருகிறேன்,” என்று கூறி அதன் அருகிலேயே இருந்து அதனைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டது.

குருவியும் சில நாள்களில் உடல்நலம் தேறியது. குருவி காகத்தைப் பார்த்து, “எனக்கு துன்பம் வந்தபோது எனது அழகிய நண்பர்கள் யாரும் எனக்கு உதவவில்லை. ஆனால் நீயோ என்னைக் காப்பாற்றிவிட்டாய். உலகிலேயே நீதான் அழகானவன். இனிமேல் நீதான் என் உயிர் நண்பன்,” என்றது.

ஆம் சிறுவர்களே! யாரையும் அவர்களின் தோற்றத்தை வைத்து அவமானப்படுத்தக் கூடாது. புறத்தோற்ற அழகு அழியக் கூடியது. ஆனால் அகத்தின் அழகோ அழியாதது. நிலையானது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

காகம் பற்றிய சில குறிப்புகள்:

காகம் கார்விடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை இனம்.

காகம் அதிகாலையில் எழுந்துவிடும் குணம் உடையது.

காகத்தின் மூளை பெரியது என்பதால் அவற்றின் அறிவுத் திறனும் அதிகம்.

காகம் ஒரு முறை 3 முதல் 9 முட்டைகள் வரை இடும்.

பெரும்பாலும் காகம் மாலையில் நீர்நிலைகளில் குளித்துவிட்டுத்தான் கூட்டிற்குச் செல்லும்.

காகம் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

குறிப்புச் சொற்கள்