சிங்கப்பூரின் கடைசி பழங்காலக் கம்பத்து வீடுகளின் இருப்பிடமான உபின் தீவு, பண்பாட்டு ரீதியில் மட்டுமல்லாது இயற்கை வளத்திலும் நிகரற்றதாகத் திகழ்கிறது.
1,020-ஹெக்டர் நிலப் பரப்பளவு கொண்ட இத்தீவில் 786 உள்ளூர் செடிகொடி வகைகள், 242 பறவையினங்கள், 201 வகையான பட்டாம்பூச்சிகள், மற்றும் ராஜ நாகம் உட்பட பல பாம்புகள், வெளவால்கள், தவளைகள் என நீர், நில விலங்குகளும் உள்ளன.
உபின் தீவின் பண்பாட்டு, இயற்கை வளங்களைக் கட்டிக்காக்க 2014ல் தொடங்கப்பட்ட உபின் திட்டத்தில் மாணவர்களுக்கும் பங்கு உண்டு!
உபின் தினத்தன்று அறிமுகமான திட்டம்
உபின் திட்டத்தின் முக்கிய நாளான ‘உபின் தினம்’, ஆண்டுதோறும் உபின் தீவில் நடைபெற்றுவருகிறது.
அவ்வகையில், இவ்வாண்டு ஞாயிற்றுக்கிழமை ஜூன் 26ஆம் தேதி நடைபெற்ற உபின் தினத்தில், ‘உபின் பள்ளித் திட்டம்’ அறிமுகமானது.
பல தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகளின் ஆதரவோடும் ‘அவுட்வர்ட் பவுண்ட் சிங்கப்பூர்’ (ஓபிஎஸ்) அமைப்பின் பங்காளித்துவத்தோடும் தேசிய பூங்காக் கழகம் இத்திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இதன்மூலம், மாணவர்கள் அனுபவ ரீதியாக சுற்றுப்புறத்தைப் பற்றியும், உபின் தீவின் சிறப்பைப் பற்றியும் கற்றுக்கொள்ள பல புதிய வாய்ப்புகள் எழும்!
2016ல் தொடங்கப்பட்ட ‘உபின் லிவிங் லேப்’ ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்து உபின் பள்ளித் திட்ட நடவடிக்கைகள் இடம்பெறும். மாணவர்கள் தம் ஆசிரியர்களோடு சென்று அங்குள்ள சுற்றுப்புற ஆய்வகம், சதுப்புநிலத் தோட்டம் போன்றவற்றைக் காணலாம்.
தொடர்புடைய செய்திகள்
ஜெக் ஜாவா ஈரநிலங்கள், உபின் தீவிலுள்ள ஆர்க்கிட் பூக்கள், அருகிவரும் உயிரினங்களைக் காப்பாற்றும் முயற்சிகள் என உபின் தீவின் இயற்கை வளங்களைப் பற்றி பலவிதத் தகவல்களையும் மாணவர்கள் அறியலாம்.
மேலும், அனுபவமிக்கக் கல்வியாளர்கள் அடங்கிய ‘உபின் நண்பர்கள்’ கல்வியாளர் செயற்குழுவும் தேசிய பூங்காக் கழகமும் இணைந்து உபின் தீவு சார்ந்த பாடத்திட்டங்களை பள்ளியாசிரியர்களுக்கு வழங்கவுள்ளன.
உபின் பள்ளித் திட்டத்தின் முன்னோடியிலும் கல்வி அமைச்சு சுற்றுப்புற தலைமைத்துவத் திட்டத்திலும் கடந்த சில மாதங்களாக சில பள்ளிகள் பங்குபெற்றுள்ளன.
உதாரணத்திற்கு, நார்த் விஸ்தா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், உபின் தீவில் முன்பு நடந்த கிரானைட் குவாரி பணிகள் (கட்டடக் கற்களை வெட்டி எடுத்தல்), அதனால் சுற்றுப்புறத்திற்கு ஏற்பட்ட விளைவுகள், உபின் தீவு இயற்கையை மறுசீரமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் போன்றவற்றைப் பற்றி அறிந்துகொண்டனர். எதிர்காலக் காடு வளர்ப்புப் பணிகளுக்காக மாணவர்கள் சதுப்புநில இளஞ்செடிகளையும் நட்டனர்.
அவர்களும், சாங்ட தொடக்கப்பள்ளி, காமன்வெல்த் உயர்நிலைப் பள்ளி, மெரிடியன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சுற்றுப்புறத்தைக் கட்டிக்காக்க தாம் மேற்கொண்ட முயற்சிகளை உபின் தினத்தன்று சிறப்பு விருந்தினர் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயிடம் படைத்தனர்.
உபின் தீவு உயிரினங்களை புகைப்படங்கள் எடுத்து அவற்றுக்கு புத்தாக்கமான விளக்கங்கள் அளித்தல், இயற்கையை வர்ணிக்கும் கவிதைகளை இயற்றுதல், ஜெக் ஜாவாவிற்குக் கற்றல் பயணம் மேற்கொள்ளுதல் போன்றவற்றை மாணவர்கள் சுவரொட்டிகளில் காண்பித்தனர்.
அமைச்சர் லீ அவர்களுடன் நடவடிக்கைகளில் பங்குகொண்டு சுற்றுப்புறம் மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறையைப் பாராட்டினார்.
புலிகள், அருகிவரும் உயிரினங்களைப் பற்றியும் தெரியப்படுத்தும் பல்வேறு சாவடிகளும் இடம்பெற்றன. சிறுவர்கள் கைவினை நடவடிக்கைள்மூலம் நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளைப் பற்றி மேலும் அறிந்துகொண்டனர்!